search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் ஒருநாள்- ஆஸ்திரேலியாவை 152-ல் சுருட்டி துவம்சம் செய்தது தென்ஆப்பிரிக்கா
    X

    முதல் ஒருநாள்- ஆஸ்திரேலியாவை 152-ல் சுருட்டி துவம்சம் செய்தது தென்ஆப்பிரிக்கா

    பெர்த்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 152 ரன்னில் சுருட்டி எளிதாக வெற்றி பெற்றது தென்ஆப்பிரிக்கா #AUSvSA
    ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று பெர்த்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டிராவிஸ் ஹெட்டை 1 ரன்னிலும், அடுத்து வந்த டிஆர்கி ஷார்ட்டை டக்அவுட்டிலும் வெளியேற்றினார் அனுபவ பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். ஆரோன் பிஞ்ச் 5 ரன்கள் எடுத்த நிலையில் நிகிடி பந்தில் வெளியேறினார்.



    8 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்த ஆஸ்திரேலியாவால், அதன்பின் மீள இயலவில்லை. 38.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆஸ்திரேலியா 152 ரன்னில் சுருண்டது. கிறிஸ் லின் 15 ரன்களும், விக்கெட் கீப்பர் கேரே 33 ரன்களும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 14 ரன்களும், கவுல்டர்-நைல்  34 ரன்களும் எடுத்தனர்.

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் பெலுக்வாயோ 3 விக்கெட்டும் டேல் ஸ்டெயின், நிகிடி, இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.



    பின்னர் 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணியின் டி காக், ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டி காக் 40 பந்தில் 47 ரன்களும், ஹென்ரிக்ஸ் 74 பந்தில் 44 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மார்க்கிராம் 36 ரன்கள் சேர்க்க, தென்ஆப்பிரிக்கா 29.2 பந்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டாய்னிஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். டேல் ஸ்டெயின் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2-வது ஒருநாள் போட்டி 9-ந்தேதி அடிலெய்டில் நடக்கிறது.
    Next Story
    ×