search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடும்ப வறுமையை சமாளிக்க டீ கடை நடத்தும் கால்பந்து வீராங்கனை
    X

    குடும்ப வறுமையை சமாளிக்க டீ கடை நடத்தும் கால்பந்து வீராங்கனை

    மேற்கு வங்காளத்தை சேர்ந்த கால்பந்து வீராங்கனை கல்பனா ராய் குடும்ப வறுமையை சமாளிக்க டீ கடை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். #IndianFootball #KalpanaRoy #RoadSideTeaStall
    ஜல்பாய்குரி:

    மேற்கு வங்காள மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டத்தை சேர்ந்த கால்பந்து வீராங்கனை கல்பனா ராய். 2008-ம் ஆண்டில் நடந்த 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கால்பந்து போட்டியில் இந்திய அணிக்காக 4 சர்வதேச போட்டியில் விளையாடி இருக்கிறார். அத்துடன் மேற்கு வங்காள மாநில அணிக்காக தேசிய அளவிலான ஜூனியர் போட்டியிலும் விளையாடி உள்ளார். 2013-ம் ஆண்டில் இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில் நடந்த பெண்கள் கால்பந்து லீக் போட்டியில் விளையாடுகையில் வலது காலில் காயம் அடைந்த கல்பனா ராயின் காயம் குணமடைய ஒரு ஆண்டுக்கு மேல் பிடித்ததால் அவரது கால்பந்து கனவு கலைந்து போனது. அத்துடன் குடும்ப சூழ்நிலையும் அவரது கால்பந்து ஆட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டு விட்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயாரை இழந்த அவர் உடல் நலம் குன்றிய தனது தந்தை மற்றும் ஒரு தங்கையை காப்பாற்ற ஜல்பாய்குரி மாவட்டத்தில் சாலையோரத்தில் தனது தந்தை வைத்து இருந்த டீ கடையை நடத்தி வருகிறார். அத்துடன் கால்பந்து மீதான ஆர்வத்தால் அங்குள்ள கிளப்பில் சிறுவர்களுக்கு காலையும், மாலையும் 2 மணி நேரம் பயிற்சி அளித்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு தனது குடும்ப வறுமையை சமாளித்து வருகிறார். அரசு உதவி செய்தால் தன்னால் மீண்டும் கால்பந்து விளையாட முடியும் என்றும் பயிற்சியாளராகும் திறமை தன்னிடம் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.



    இது குறித்து 26 வயதான கல்பனா ராய் அளித்த பேட்டியில், ‘காயத்துக்கு தரமான சிகிச்சை பெற போதிய நிதி வசதி இல்லாததால் காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வர ஒரு ஆண்டுக்கு மேலானது. காயம் அடைந்தது முதல் என்னுடைய குடும்பத்தை காப்பாற்ற டீ கடையை கவனித்து வருகிறேன். தேசிய சீனியர் பெண்கள் அணி தேர்வில் கலந்து கொள்ளும்படி என்னை அழைத்தார்கள். கொல்கத்தாவில் தங்கி இருந்து பயிற்சி பெற பண வசதி இல்லாததாலும், குடும்ப வறுமை காரணமாகவும் என்னால் பங்கேற்க முடியவில்லை. நான் இன்னும் நல்ல உடல் தகுதியுடன் தான் இருக்கிறேன். என்னால் சீனியர் அணியில் விளையாட முடியும். அத்துடன் எனது அனுபவத்தை பயிற்சிக்கும் பயன்படுத்த முடியும். எனக்கு அரசு வேலை வாய்ப்பு அளித்தால் எனது குடும்ப தேவைகளை சமாளிப்பதுடன் கால்பந்து ஆட்டத்திலும் கவனம் செலுத்த முடியும்’ என்று தெரிவித்துள்ளார். #IndianFootball #KalpanaRoy #RoadSideTeaStall
    Next Story
    ×