search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 விக்கெட் வீழ்த்திய ஜார்கண்ட் வீரர் அன்குல் ராய்.
    X
    4 விக்கெட் வீழ்த்திய ஜார்கண்ட் வீரர் அன்குல் ராய்.

    விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் - ஜார்கண்ட், ஐதராபாத் அணிகள் அரையிறுதிக்கு தகுதி

    விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட், ஐதராபாத் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. #VijayHazareTrophy
    பெங்களூரு:

    விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. 37 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் முடிவில் 8 அணிகள் கால்இறுதியை எட்டின.

    இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று நடந்த 3-வது கால்இறுதி ஆட்டத்தில் மராட்டியம்-ஜார்கண்ட் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த ஜார்கண்ட் அணி, மராட்டியத்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதன்படி முதலில் பேட் செய்த மராட்டிய அணி, ஜார்கண்ட் வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 42.2 ஓவர்களில் 181 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக ரோஹித் மோத்வானி 52 ரன்னும், கேப்டன் ராகுல் திரிபாதி 47 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஜார்கண்ட் அணி தரப்பில் அன்குல் ராய் 4 விக்கெட்டும், ராகுல் சுக்லா 3 விக்கெட்டும், வருண் ஆரோன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இலக்கை நோக்கி ஜார்கண்ட் அணி பேட்டிங் செய்கையில் 2 முறை மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி ஜார்கண்ட் அணிக்கு 34 ஓவர்களில் 127 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜார்கண்ட் அணி 32.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. ஆனந்த் சிங் 12 ரன்னிலும், கேப்டன் இஷான் கிஷன் 28 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஷஷீம் ரதோர் 53 ரன்னுடனும், சவுரப் திவாரி 29 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    பெங்களூருவில் நடந்த மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் ஐதராபாத்-ஆந்திரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சந்தீப் 96 ரன்கள் எடுத்தார். கேப்டன் அம்பத்தி ராயுடு 28 ரன்னில் ‘ரன்-அவுட்’ ஆனார். பின்னர் 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆந்திரா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 267 ரன்களே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. ஆந்திர அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹனுமா விஹாரி 95 ரன்னும், ரிக்கி புய் 52 ரன்னும் எடுத்தனர்.

    பெங்களூருவில் நாளை நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் மும்பை-ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. நாளை மறுநாள் நடைபெறும் 2-வது அரைஇறுதியில் டெல்லி-ஜார்கண்ட் அணிகள் சந்திக்கின்றன. #VijayHazareTrophy
    Next Story
    ×