search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்- வெஸ்ட்இண்டீஸ் பாலோஆன்
    X

    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்- வெஸ்ட்இண்டீஸ் பாலோஆன்

    ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்தியா - மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பாலோஆன் ஆனது. #INDvWI
    ராஜ்கோட்:

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.

    முதலில் விளையாடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 649 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. 3 வீரர்கள் சதம் அடித்தனர். புதுமுக வீரர் பிரித்விஷா 134 ரன்னும், கேப்டன் வீராட் கோலி 139 ரன்னும், ஜடேஜா 100 ரன்னும் எடுத்தனர். ரி‌ஷப்பன்ட் (92 ரன்), புஜாரா (86) ஆகியோர் சதத்தை தவற விட்டனர்.

    தேவேந்திர பிஷூ 4 விக்கெட்டும், லீவிஸ் 2 விக்கெட்டும், கேப்ரியல், பிராத்வெயிட், ரோஸ்டன் சேஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் விக்கெட்டுகளை இழந்து திணறியது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன் எடுத்து இருந்தது.

    ரோஸ்டன் சேஸ் 27 ரன்னும், கீமோ பவுல் 13 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 555 ரன்கள் பின்தங்கிய நிலை, கைவசம் 4 விக்கெட் என்ற நிலையில் வெஸ்ட்இண்டீஸ் தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடியது.


    இந்த ஜோடி சிறிது தாக்கு பிடித்து ஆடியது. உமேஷ் யாதவ் இந்த ஜோடியை பிரித்தார். பவுல் 47 ரன் எடுத்து இருந்தபோது ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 147 ஆக இருந்தது. இந்த ஜோடி 43 ரன் எடுத்தது. அடுத்து தேவேந்திர பிஷூ களம் வந்தார். மறுமுனையில் இருந்த ரோஸ்டன் சேஸ் 66 பந்தில் 50 ரன்னை எடுத்தார். சிறிது நேரத்தில் 53 ரன் எடுத்த நிலையில் அவர் அஸ்வின் பந்தில் வெளியேறினார். கடைசி 2 விக்கெட்டையும் அஸ்வினே தனது சிறப்பான பந்து வீச்சில் வெளியேற்றினார்.

    வெஸ்ட்இண்டீஸ் அணி 48.2 ஓவர்களில் 181 ரன்னில் சுருண்டது. இதனால் அந்த அணி ‘பாலோஆன்’ ஆனது.

    அஸ்வின் 37 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். முகமது ‌ஷமி 2 விக்கெட்டும், உமேஷ்யாதவ், ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    468 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட்இண்டீஸ் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது. #INDvWI
    Next Story
    ×