search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அணிக்கு வீரர்களை தேர்வு செய்வது என்னுடைய வேலை இல்லை - கருண் நாயர் நீக்கத்துக்கு விராட் கோலி பதில்
    X

    அணிக்கு வீரர்களை தேர்வு செய்வது என்னுடைய வேலை இல்லை - கருண் நாயர் நீக்கத்துக்கு விராட் கோலி பதில்

    மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் கருண் நாயர் நீக்கப்பட்டதற்கு பதிலளித்த விராட் கோலி, வீரர்களை தேர்வு செய்வது என் வேலை இல்லை என தெரிவித்தார். #INDvWI #KarunNair #ViratKohli
    புதுடெல்லி :

    2 டெஸ்ட், 5 ஒருநாள், மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை ராஜ்கோட் மைதானத்தில் தொடங்குகிறது.

    இதற்கிடையே, இந்த தொடரில் பங்கேற்கும் 15 வீரர்களின் பட்டியலை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. இந்திய அணியில் மயாங் அகர்வால், முகமது சிராஜ், அனுமா விஹாரி, பிருத்வி ஷா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் சொதப்பிய ஷிகர் தவான், முரளி விஜய் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆனால், அந்த தொடரில் அணியில் சேர்க்கப்பட்ட கருண் நாயர் 5 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இங்கிலாந்து தொடரின் பாதியில் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட ரிஷப் பந்த் மற்றும் அனுமன் விகாரி ஆகியோருக்கு கூட விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது நினைவு கூறத்தக்கது.

    இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கருண் நாயர் நீக்கம் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், வீரர்களை தேர்வு செய்வது என்னுடைய வேலை இல்லை என பதிலளித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், வீரர்கள் தேர்வு தொடர்பான முடிவுகள் அனைத்தும் ஒரே இடத்தில் எடுக்கப்படுவதாக நினைத்து மக்கள் குழம்புகின்றனர். ஆனால், அதில் உண்மை இல்லை. அனைத்து முடிவுகளையும் ஒரே இடத்தில் எடுக்கப்படுவதில்லை என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், எல்லாவற்றையும் கூட்டாக சேர்ந்து முடிவு செய்வதில்லை என்பதையும் மக்கள் உணர வேண்டும்.

    கருண் நாயர் நீக்கம் தொடர்பாக தேர்வாளர்கள் ஏற்கெனவே பதிலளித்துவிட்டனர். எனவே, அதைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை, வீரர்களை தேர்வு செய்வதும் என்னுடைய வேலை இல்லை என தெரிவித்தார்.

    அடுத்ததாக பிரித்வி ஷா உள்ளிட்ட இளம் வீரர்களின் தேர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அணியின் டாப் ஆர்டரில் பல மாற்றங்களை செய்துள்ளோம். புதிய வீரர்களுக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கி, அணியில் அவர்கள் களமிறங்கும் இடத்தில் வீரர்கள் வசதியாக உணரவும், அவர்களின் ஆட்டத்தில் அவர்கள் நம்பிக்கை கொள்ளவும் நாங்கள் வழிவகை செய்ய முயற்சிக்கிறோம் என கோலி கூறினார். #INDvWI #KarunNair #ViratKohli
    Next Story
    ×