search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க ஆண்டு விழாவில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி பேசிய காட்சி
    X
    திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க ஆண்டு விழாவில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி பேசிய காட்சி

    டிஎன்பிஎல் போட்டி இளம்வீரர்களுக்கு சிறந்த தளம்- ஹேமங் பதானி

    டிஎன்பிஎல் போட்டி இளம்வீரர்களுக்கு சிறந்த தளம் எனவும் கிரிக்கெட்டில் சாதிக்க கடும் பயிற்சி வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி கூறியுள்ளார். #TNPL #hemangbadani
    திருச்சி:

    திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க ஆண்டு விழா, தேசிய கல்லூரி அரங்கத்தில் நேற்று காலை நடந்தது. விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைமை செயல் அதிகாரி விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணை செயலாளர் மார்ட்டின்ராஜ், திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி கலந்துகொண்டு, மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.

    மாவட்டங்கள் தோறும் அதிக அளவிலான கிரிக்கெட் மைதானங்கள் இருப்பது சிறப்பான அம்சம் தான். அப்போது தான் நிறைய இளம் வீரர்கள் உருவாகுவார்கள். டிஎன்பிஎல் போட்டிகள் நடத்தப்படுவது தற்போது இளம் வீரர்களுக்கு சிறந்த தளமாக உள்ளது. வீரர்களாகிய நீங்கள் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். உங்களிடம் திறமை இருந்தால் டிஎன்பிஎல், ஐபிஎல் போட்டிகள் மட்டு மல்ல, இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் கூட விளையாட முடியும்.

    சிறிய மாவட்டத்தில் இருந்து வருகிறீர்களா? சிறிய நகரத்தில் இருந்து வருகிறீர்களா? என்பதெல்லாம் முக்கியம் கிடையாது. டோனி சிறிய நகரத்தில் இருந்து தான் கிரிக்கெட்டுக்கு வந்தார். முன்னணி கிரிக்கெட் வீரர்களாக உருவாகிய ஜாகீர்கான், சுரேஷ் ரெய்னா, சேவாக் போன்றவர்கள் எல்லாம் சிறிய நகரங்களில் இருந்து வந்தவர்கள் தான்.

    ஆனால், கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டுமானால் கடும் பயிற்சி அவசியம். அதிகாலையிலேயே எழுந்து மைதானத்துக்கு சென்று விட வேண்டும். அதேபோல் மாலையிலும் பலமணிநேரம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். வீட்டில் பிள்ளைகள் படிக்கவில்லை என்றால் பெற்றோர் கட்டாயப்படுத்தி படிக்க வைப்பார்கள். ஆனால் பிள்ளைகள் விளையாடவில்லை என்றால் கட்டாயப்படுத்தி விளையாட வைக்கமாட்டார்கள். நாம் தான் ஆர்வத்துடன் விளையாட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி விஸ்வநாதன் பேசும்போது, மாவட்டங்கள் தோறும் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. டிஎன்பிஎல் போட்டிகளில் விளையாடும் 150 பேரில் 60 முதல் 70 பேர் சிறிய மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் தான். தமிழகத்தின் மையப்பகுதியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு ஒரு சிறந்த கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அமைக்க ஆலோசனை செய்து வருகிறார்கள். அவ்வாறு அமைக்கப்படுகிறபோது, அங்கு வருங்காலத்தில் ஐபிஎல் போட்டிகள் கூட நடத்தப்படலாம் என்றார். #TNPL #hemangbadani
    Next Story
    ×