search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பையை இந்தியா வெல்லுமா? - வங்காளதேசத்துடன் நாளை மோதல்
    X

    ஆசிய கோப்பையை இந்தியா வெல்லுமா? - வங்காளதேசத்துடன் நாளை மோதல்

    ஆசிய கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் நாளை நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா-மொர்தாசா தலைமையிலான வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன. #AsiaCupfinal #AsiaCup2018 #INDvBAN
    துபாய்:

    6 நாடுகள் பங்கேற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. கடந்த 15-ந் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 6 நாடுகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. 20-ந் தேதியுடன் ‘லீக்’ ஆட்டம் முடிந்தது. இதன் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

    5 முறை சாம்பியனான இலங்கை, ஹாங்காங் தொடக்க சுற்றிலேயே வெளியேறின. ‘சூப்பர்4’ சுற்று 21-ந் தேதி தொடங்கியது.

    இந்திய அணி வங்காள தேசம், பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ஆப்கானிஸ்தானுடன் ‘டை’ செய்தது. ஆப்கானிஸ்தான் அணி 2 தோல்வியை தழுவியதால் வாயப்பை இழந்து வெளியேறியது. இறுதிப்போட்டிக்கு நுழையும் இன்னொரு அணியை முடிவு செய்வதற்கான ஆட்டம் அபுதாபியில் நேற்று நடந்தது.


    இதில் பாகிஸ்தான் அணி வங்காளதேசத்திடம் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறியது. முதலில் விளையாடிய வங்காளதேசம் 48.5 ஓவரில் 239 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 202 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் வங்காள தேசம் 37 ரன்னில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    ஆசிய கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா-மொர்தாசா தலைமையிலான வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன.

    பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் இருக்கும் இந்திய அணி ஆசிய கோப்பையை 7-வது முறையாக வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016 (20 ஓவர்) ஆகிய ஆண்டுகளில் ஆசிய கோப்பையை வென்று இருந்தது.

    இந்த போட்டித்தொடரில் ஏற்கனவே வங்காள தேசத்தை ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. அதே நேரத்தில் வங்காள தேசம் அணியை சாதாரணமாக எடை போட இயலாது. பாகிஸ்தானை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்து இருந்தது. இதனால் இந்திய வீரர்கள் மிகுந்த கவனத்துடன் விளையாடவேண்டும்.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா, தவான், புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல் ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. நாளைய இறுதிப் போட்டிக்கு அவர்கள் திரும்புவார்கள்.


    தொடக்க வீரர்களான தவான் (327 ரன்), ரோகித் சர்மா (269 ரன்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதில் தவான் இரண்டு சதமும், ரோகித் சர்மா ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதமும் அடித்துள்ளனர். இருவரது ஆட்டத்தை பொறுத்தே அணியின் ரன் குவிப்பு இருக்கும் இதே போல் அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், டோனி, கேதர் ஜாதவ் ஆகியோரும் அணிக்கு பலம் சேர்க்க கூடியவர்கள்.

    பந்து வீச்சில் பும்ரா, குல்தீப் யாதவ் (இருவரும் தலா 7 விக்கெட்), புவனேஷ்வர் குமார் (6 விக்கெட்), யசுவேந்திர சாஹல் (5 விக்கெட்), ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    வங்காள தேசம் அணி 3-வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. 2012-ல் பாகிஸ்தானிடமும், 2016-ல் இந்தியாவிடமும் தோற்று கோப்பையை இழந்தது. இதனால் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து முதல் முறையாக ஆசிய கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது.

    அந்த அணியில் முஷ்பிகுர் ரகிம் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளார். அவர் ஒரு சதம், ஒரு அரை சதத்துடன் 297 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருப்பார்.

    பந்துவீச்சில் முஷ்டாபிசுர் ரகுமான் 8 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை கொடுக்க கூடியவர். முன்னாள் கேப்டனும், ஆல் ரவுண்டருமான ஹகீப்-அல்-ஹசன் காயத்தால் விலகியது வங்காளதேச அணிக்கு பாதிப்பே.

    இரு அணிகளும் ஆசிய கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AsiaCupfinal #AsiaCup2018 #INDvBAN
    Next Story
    ×