search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணி வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் முக்கிய காரணம் - ரோகித் சர்மா பாராட்டு
    X

    இந்திய அணி வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் முக்கிய காரணம் - ரோகித் சர்மா பாராட்டு

    ‘பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தொடர்ச்சியாக இந்திய அணி வெற்றி பெற பந்து வீச்சாளர்கள் முக்கிய காரணம்’ என்று கேப்டன் ரோகித் சர்மா பாராட்டினார். #AsiaCup2018 #RohitSharma #IndiavsPakistan
    14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் துபாயில் நேற்று முன்தினம் நடந்த சூப்பர்-4 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடி அசத்தியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்ய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சோயிப் மாலிக் 78 ரன்னும், கேப்டன் சர்ப்ராஸ் அகமது 44 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்ட ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோர் அதிரடியாக அடித்து ஆடி பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை பதற வைத்ததுடன், அணியை வெற்றிப் பாதையில் அருமையாக அழைத்து சென்றனர். 15-வது சதம் அடித்த ஷிகர் தவான் 100 பந்துகளில் 16 பவுண்டரி, 2 சிக்சருடன் 114 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் சோயிப் மாலிக் பந்து வீச்சில் ஹசன் அலியால் ரன்-அவுட் செய்யப்பட்டு வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 33.3 ஓவர்களில் 210 ரன்னாக இருந்தது.



    அடுத்து அம்பத்தி ராயுடு, ரோகித் சர்மாவுடன் இணைந்தார். இந்த இணை அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. இந்திய அணி 39.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. 19-வது சதம் கண்ட கேப்டன் ரோகித் சர்மா 119 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 111 ரன்னும், அம்பத்தி ராயுடு 18 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 14 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய வீரர் ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    இந்த போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காத இந்திய அணி ‘சூப்பர்-4’ சுற்றில் தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை சாய்த்து இருந்தது. முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்த பாகிஸ்தான் அணி ‘சூப்பர்-4’ சுற்றில் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். வங்காளதேசத்துக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து இந்திய அணி ஒரு ஆட்டம் மீதம் இருக்கையிலேயே இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. லீக் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை பதம் பார்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், ‘நமது அணியின் ஒட்டுமொத்த பவுலர்களும் தங்கள் இலக்கை எட்ட தீவிரம் காட்டினார்கள். சவாலான இந்த சூழலில் பந்து வீச்சாளர்கள் மீண்டும் சிறப்பாக செயல்பட்டு எதிரணியை அதிகம் ரன் குவிக்க விடாமல் கட்டுப்படுத்தியது பாராட்டுக்குரிய விஷயமாகும். இதனால் வெற்றி எளிதில் நமது வசமானது. ஷிகர் தவான் அணியில் தனது பங்கை உணர்ந்து விளையாடக்கூடியவர். நான் அவரிடம் அதிகம் பேச வேண்டிய அவசியம் கிடையாது. எங்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது. இங்குள்ள சூழலில் சிக்சர் அடிப்பது எளிதான காரியம் அல்ல. அதற்காக கடினமாக பயிற்சி எடுத்தேன். எதிரணி பவுலர்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற அதிரடி ஷாட்களை ஆடினேன். ஏனெனில் பாகிஸ்தான் அணி வலுவான பந்து வீச்சை கொண்டதாகும். அவர்களுக்கு நாம் நெருக்கடி கொடுக்கவில்லை என்றால் அவர்கள் முன்பு போல் நமக்கு தொல்லை கொடுத்து விடுவார்கள். முதல் 10 ஓவர்களுக்குள் விக்கெட்டை இழக்காமல் விளையாட வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டோம்’ என்று தெரிவித்தார்.

    தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கருத்து தெரிவிக்கையில், ‘ரோகித் சர்மா உள்பட சிலரின் கேட்ச் வாய்ப்புகளை நாங்கள் தவறவிட்டதன் பலனை போட்டி முடிவில் அனுபவித்தோம். அத்துடன் நாங்கள் 20 முதல் 25 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். கேட்ச்களை நாங்கள் தவறவிடாமல் இருந்திருந்தால் ஆட்டத்தின் போக்கு வேறு மாதிரி அமைந்து இருக்கலாம். மாலையில் இந்த பிட்ச்சில் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. நாங்கள் தொடக்கத்தில் விக்கெட் வீழ்த்தி இருந்தால் வெற்றி இலக்கை சேசிங் செய்வது எதிரணிக்கு கடினமானதாக இருந்து இருக்கும். தொடக்கத்தில் நாங்கள் அதிக விக்கெட்டுகளை இழந்ததால் சரிவில் இருந்து மீண்டு வர முடியாமல் போய்விட்டது. ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆட்டம் அருமையாக இருந்தது. எங்களுடன் ஒப்பிடுகையில் அவர்கள் ஆட்ட திறன் உயர்வானது. நாங்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் எங்கள் ஆட்ட திறனை மேம்படுத்த வேண்டியது அவசியமானதாகும். வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டம் எங்களுக்கு வாழ்வா-சாவா? போட்டியாகும். அதில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்று நம்புகிறேன்’ என்றார். #AsiaCup2018 #RohitSharma #IndiavsPakistan

    Next Story
    ×