search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஜய் தாகூர்
    X
    அஜய் தாகூர்

    புரோ கபடி லீக் போட்டிக்கு தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக தயாராகி இருக்கிறது - கேப்டன் அஜய் தாகூர்

    புரோ கபடி லீக் போட்டிக்கு தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக தயாராகி இருக்கிறது என்று அந்த அணியின் கேப்டன் அஜய் தாகூர் தெரிவித்தார். #ProKabaddileague #AjayThakur
    சென்னை:

    12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந் தேதி தொடங்குகிறது. தொடக்க லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி) அணியை எதிர்கொள்கிறது. சென்னை சுற்று ஆட்டம் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. சோனாபட், புனே, பாட்னா, நொய்டா உள்பட பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் அரங்கேறுகிறது. இறுதிப்போட்டி மும்பையில் ஜனவரி 5-ந் தேதி நடக்கிறது.

    புரோ கபடி லீக் போட்டி தொடரில் கடந்த ஆண்டு அறிமுகமான தமிழ் தலைவாஸ் அணி எதிர்பார்த்தபடி ஜொலிக்காமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. 22 லீக் ஆட்டங்களில் ஆடிய அந்த அணி 6 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 14 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. 2 ஆட்டங்கள் டையில் முடிந்தது. இந்த சீசனில் புதிய வீரர்களுடன் களம் காண இருக்கும் தமிழ் தலைவாஸ் அணி கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் சென்னையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் புதிய சீசன் குறித்து தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாகூரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி: சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டில் இந்திய கபடி அணி பின்னடைவை சந்தித்தது பற்றி?

    பதில்: கபடி இந்தியாவின் மிக பிரபலமான விளையாட்டாக உள்ளது. மேலும் பல நாடுகள் கபடியை ஒரு தீவிரமான விளையாட்டாக எடுத்துக் கொள்ள தொடங்கியுள்ளன. இதனால் பல்வேறு நாடுகளில் கபடி ஒரு முக்கிய விளையாட்டாக உருவெடுத்துள்ளது. எனவே கபடியில் முன்பு போல் இந்தியா மட்டுமே ஆதிக்கம் செலுத்துவது கடினமாகிறது. புரோ கபடியில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களும் நமக்கு இணையான பலத்துடன் மிக சிறப்பாக செயல்படுகிறார்கள்.

    கேள்வி: கடந்த தொடர் தமிழ் தலைவாஸ் அணியினருக்கு அவ்வளவு சிறப்பானதாக இல்லை. இந்த தொடர் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

    பதில்: கடந்த ஆண்டு எங்கள் அணியில் இளம் வீரர்கள் அதிக அளவில் இடம் பிடித்து இருந்தனர். ஆனால் கடினமான சூழ்நிலைகளில் அனுபவமிக்க வீரர்கள் அணியில் இருப்பது மிகவும் அவசியமாகும். இந்த ஆண்டு எங்கள் அணியில் மூத்த மற்றும் இளம் வீரர்கள் சரிசமமான விகிதத்தில் சேர்க்கப்பட்டு நாங்கள் ஒரு சிறந்த அணியாக வந்துள்ளோம். இந்த ஆண்டு எங்களுக்குரியது என்பதை உறுதிப்படுத்த தயாராக உள்ளோம்.

    கேள்வி: கடந்த தொடருடன் ஒப்பிடும்போது இந்த சீசனில் உங்கள் அணியில் பல புதிய வீரர்கள் இடம் பெற்றுள்ளதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்: இந்த தொடரில் எங்கள் அணியில் பயிற்சியாளர் உட்பட பல்வேறு புதுமுகங்களை நீங்கள் பார்க்கலாம். இருப்பினும் தற்போதைய பயிற்சியாளர் எடச்சேரி பாஸ்கரனை 2014-ம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தபோதில் இருந்தே எனக்கு நன்கு தெரியும். மூத்த வீரர்கள் மற்றும் இளம் வீரர்களுக்கு என்ன மாதிரியான ஆலோசனைகளை வழங்கவேண்டும் என்பதிலும், அவர்களை எப்போதும் முழு உத்வேகத்துடன் தயார் நிலையில் வைத்திருப்பதிலும் அவர் சிறந்த அனுபவம் கொண்டவர். அணிக்கு பல புதிய வீரர்கள் வருகை தந்துள்ளனர். அவர்கள் மூலம் நாங்கள் புதிய யுக்திகளையும், நுட்பங்களையும் கற்றுக்கொள்கிறோம்.

    கேள்வி: இந்த ஆண்டு போட்டிக்கு எப்படி தயார் ஆகி இருக்கிறீர்கள்?

    பதில்: போட்டிக்கு மிகச்சிறப்பான முறையில் தயாராகி உள்ளோம். சமீப காலமாக கபடியை பெருவாரியான மக்கள் பின்பற்ற தொடங்கியுள்ளனர். இந்த தொடரை எங்களது திறமையை வெளிப்படுத்த மிக சிறந்த மேடையாக கருதுவதுடன், பார்வையாளர்களுக்கு விருந்து படைக்க ஆர்வமாக உள்ளோம்.

    கேள்வி: புரோ கபடி லீக் இந்திய கபடி வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகிறது?

    பதில்: நாங்கள் முன்பு சர்வதேச போட்டிகளில் விளையாடும்போது பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை. புரோ கபடி வருகையால் இந்திய கபடி விளையாட்டுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்துள்ளது. தற்போது அணியின் வீரர்கள் பலரும் உள்ளூர் மக்களுக்கு மிகுந்த பரிச்சயமானவர்களாகவும், நெருக்கமானவர்களாகவும் உள்ளனர். இது எங்களை மேலும் நன்றாக செயல்பட தூண்டுகிறது. அத்துடன் இது எங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் உதவுகிறது. புரோ கபடி அறிமுகத்துக்கு பின்னர் கபடி ஆட்டம் குறித்த மக்களின் சிந்தனை வெகுவாக மாறியுள்ளது. இந்தியா முழுவதும் எங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக உணர்கிறோம்.

    கேள்வி: தமிழ் தலைவாஸ் அணியின் இலக்கு என்ன?

    பதில்: இந்த சீசனில் எங்களது முதற்கட்ட இலக்கு ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைவது ஆகும். அந்த நிலையை எட்டிய பிறகு அடுத்த கட்டம் குறித்து திட்டமிடுவோம். கபடியை தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சேர்ப்பது மட்டுமின்றி ஒவ்வொரு குழந்தைக்கும் கபடி விளையாட்டில் ஆர்வம் உண்டாக்க வேண்டும் என்பது தான் தமிழ் தலைவாஸ் அணியின் விருப்பமாகும். அடுத்த தலைமுறை வீரர்களால் இந்திய கபடி இன்னும் உயர்வான இடத்தை அடையும் என்று உறுதியாக நம்புகிறோம்.

    இவ்வாறு அஜய் தாகூர் கூறினார்.  #ProKabaddileague #AjayThakur
    Next Story
    ×