search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யூரோ சாம்பியன்ஸ் லீக்- மெஸ்சி ஹாட்ரிக், ரொனால்டோ ரெட் கார்டு பெற்று ஏமாற்றம்
    X

    யூரோ சாம்பியன்ஸ் லீக்- மெஸ்சி ஹாட்ரிக், ரொனால்டோ ரெட் கார்டு பெற்று ஏமாற்றம்

    யூரோ சாம்பியன்ஸ் லீக்கில் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடிக்க, கிறிஸ்டியானோ ரொனால்டோ ரெட் கார்டு பெற்று ஏமாற்றம் அளித்தார். #Messi #Ronaldo
    ஐரோப்பா கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கிளப் அணிகளுக்கு இடையில் சாம்பியன்ஸ் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2018-19-ம் ஆண்டிற்கான தொடர் நேற்றிரவு தொடங்கியது. இதில் 32 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது. இந்த அணிகள் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா இரண்டுமுறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

    ஒரு ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப்பான பார்சிலோனா நெதர்லாந்தின் பிஎஸ்வி எய்ன்டோவன் அணியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியது முதலே மெஸ்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    32-வது நிமிடத்தில் மெஸ்சி முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் பார்சிலோனா 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 77 மற்றும் 87-வது நிமிடத்தில் மெஸ்சி அடுத்தடுத்து கோல் அடித்தார். இதற்கிடையில் டெம்பேள் 75-வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 4-0 என வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் ‘எச்’ பிரிவில் இடம் பிடித்துள்ள இத்தாலியின் முன்னணி கிளப்பான யுவான்டஸ் வாலென்சியாவை எதிர்கொண்டது. யுவான்டஸ் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம் பிடித்திருப்பதால், அந்த அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    முதல் பாதி ஆட்டத்தில் ஆட்டம் பரபரப்பாக சென்றது. ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் யுவான்டஸ் அணிக்கு ‘ப்ரீ ஹிக்’ வாய்ப்பு கிடைத்தது. அப்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ பந்தை அடிக்க முயற்சி செய்தார். அவருடன் வாலென்சியா வீரரும் சென்றார். அப்போது வாலென்சியா வீரர் கீழே விழுந்தார். உடனே கிறிஸ்டியானா ரொனால்டோ அவரை தலையில் தட்டினார். இதனால் நடுவர் அதிரடியாக ரெட் கார்டு கொடுத்து ரொனால்டோவை வெளியேற்றினார்.

    எவ்வளவு மன்றாடியும் நடுவர் தனது முடிவை மாற்றவில்லை. இதனால் ரொனால்டோ கண்ணீர் வடித்தபடி வெளியேறினார். ரொனால்டோ இல்லாமல் யுவான்டஸ் 10 வீரர்களுடன் விளையாடியது. முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.



    2-வது பாதி நேரத்தில் 45 மற்றும் 51 நிமிடத்தில் யுவான்டஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தது. இதை மிராலெம் சரியாக பயன்படுத்தி கோல் அடித்தார். இதனால் 2-0 என யுவான்டஸ் முன்னிலைப் பெற்றது. அதன்பின் 39 நிமிடங்கள் கோல் அடிக்க விடாமல் பார்த்துக் கொண்டனர். இதனால் ரொனால்டோ இல்லாமலேயே யுவான்டஸ் 2-0 என வெற்றி பெற்றது.

    சாம்பியன்ஸ் லீக் முதல் லீக்கில் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய நிலையில், ரொனால்டோ ரெட் கார்டு பெற்று ஏமாற்றம் அளித்தார்.
    Next Story
    ×