search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜான் கிரிகோரி
    X
    ஜான் கிரிகோரி

    சென்னையின் எப்.சி. அணி மீண்டும் கோப்பையை வெல்லும் - பயிற்சியாளர் ஜான் கிரிகோரி பேட்டி

    ‘இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி மீண்டும் கோப்பையை வெல்லும்’ என்று பயிற்சியாளர் ஜான் கிரிகோரி தெரிவித்தார். #ChennaiyinFC #JohnGregory
    பானாஜி:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொல்கத்தாவில் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டி தொடரில் கொல்கத்தா அணி 2014, 2016-ம் ஆண்டுகளிலும், சென்னையின் எப்.சி. அணி 2015, 2017-ம் ஆண்டுகளிலும் கோப்பையை உச்சி முகர்ந்துள்ளன. இரு அணிகளும் 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றன. மலேசியாவில் முதல் கட்ட பயிற்சி முகாமை முடித்த சென்னையின் எப்.சி. அணி தற்போது கோவாவில் பயிற்சி பெற்று வருகிறது.

    இந்த நிலையில் சென்னையின் எப்.சி. அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் கிரிகோரி (இங்கிலாந்து) அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்த போட்டி தொடரில் எந்தவொரு அணியும் தொடர்ச்சியாக கோப்பையை வென்றது கிடையாது என்பது எனக்கு தெரியும். ஆனால் நான் சென்னை அணியின் பயிற்சியாளர் ஒப்பந்தத்தை புதுப்பித்ததன் நோக்கமே மீண்டும் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பது தான். தொடர்ச்சியாக கோப்பையை வென்ற முதல் அணி சென்னையின் எப்.சி. என்ற பெருமையை பெற வேண்டும் என்று நினைக்கிறேன்.

    இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட்ஸ் அணியின் பயிற்சியாளர் அலெக்ஸ் பெர்குசன் தனது உதவி பயிற்சியாளர்களை மாற்றி புதிய யுக்திகளை புகுத்தி அணியை வெற்றிகரமாக செயல்பட வைப்பார். அந்த பாணியை தான் நானும் கடைப்பிடித்து வருகிறேன். அதன்படி சென்னை அணியின் உதவி பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். புதிய உதவி பயிற்சியாளர்களாக பால் குரோவ்ஸ், கெவின் கிச்ஹாக் (கோல் கீப்பிங்) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒரே வகையான உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் சலிப்பு ஏற்பட்டு விடும். அதேபோல் தான் ஒரே உதவி பயிற்சியாளர்களை தொடர்ச்சியாக பயன்படுத்துவதும். புதிய உதவி பயிற்சியாளர்களை சேர்ப்பதன் மூலம் புதிய யோசனைகள் கிட்டும். அந்த மாதிரியான மாற்றத்தின் மூலம் தான் கடந்த ஆண்டு நாங்கள் கோப்பையை வென்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ChennaiyinFC #JohnGregory

    Next Story
    ×