search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானை 162 ரன்னில் கட்டுப்படுத்தியது இந்தியா- புவனேஸ்வர் குமார், கேதர் ஜாதவ் அபாரம்
    X

    பாகிஸ்தானை 162 ரன்னில் கட்டுப்படுத்தியது இந்தியா- புவனேஸ்வர் குமார், கேதர் ஜாதவ் அபாரம்

    புவனேஸ்வர் குமார் மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் பாகிஸ்தானை 162 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது இந்தியா #INDvPAK #AsiaCup2018
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் இடையிலான குரூப் பிரிவு ஆட்டம் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷர்துல் தாகூர், கலீல் அகமது நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா, பும்ரா சேர்க்கப்பட்டனர்.

    பாகிஸ்தான் அணியின் இமாம்-உல்-ஹக் பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். முதல் ஓவரில் பாகிஸ்தான் இரண்டு ரன்கள் எடுத்தது. 2-வது ஓவரை பும்ரா வீசினார். பகர் சமான் இந்த ஓவரை சந்தித்தார். இந்த ஓவரில் பகர் சமான் ரன்ஏதும் அடிக்கவில்லை. இதனால் மெய்டன் ஓவராக அமைந்தது.

    3-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை முன்னால் வந்து அடிக்க முயன்றார் இமாம்-உல்-ஹக். பந்து பேட்டின் முனையில் உரசி டோனியிடம் தஞ்சம் புகுந்தது. இதனால் பாகிஸ்தான் இரண்டு ரன்களுக்குள் முதல் விக்கெட்டை இழந்தது. 2-வது விக்கெட்டுக்கு பாபர் ஆசம் களம் இறங்கினார். இந்த அடுத்த ஐந்து பந்துகளையும் தடுத்து ஆடினார். இதனால் புவனேஸ்வர் குமார் மெய்டனுடன் விக்கெட் வீழ்த்தினார்.

    5-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பகர் சமான் சாஹலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் 3 ரன்னுக்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது.



    3-வது விக்கெட்டுக்கு பாபர் ஆசம் உடன் சோயிப் மாலிக் ஜோடி சேர்ந்தார். 6-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் சோயிப் மாலிக் ஒரு பவுண்டரி அடித்தார். 7-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஒவரில் பாபர் ஆசம் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். 9-வது மற்றும் 20-வது ஓவரில் பாகிஸ்தான் பவுண்டரி ஏதும் அடிக்கவில்லை.

    பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் மட்டுமே எடுத்தது. நேரம் செல்ல செல்ல சோயிப் மாலிக், பாபர் ஆசம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் பாகிஸ்தான் ஸ்கோர் உயர ஆரம்பித்தது. 22-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் பாபர் ஆசம் க்ளீன் போல்டானார். பாபர் ஆசம் 67 பந்தில் தலா ஒரு பவுண்டரி, சிக்சருடன் 43 ரன்கள் சேர்த்தார். அப்போது பாகிஸ்தான் 85 ரன்கள் எடுத்திருந்தது. இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தது.

    அதன்பின் பாகிஸ்தான் விக்கெட்டுக்கள் வரிசையாக சரிய ஆரம்பித்தது. சர்பிராஸ் அகமது 6 ரன்னிலும், சோயிப் மாலிக் 47 ரன்னிலும் (ரன்அவுட்), ஆசிப் அலி 9 ரன்னிலும், சதாப் கான் 8 ரன்னிலும் வெளியேறினார். மூன்று விக்கெட்டுக்களையும் கேதர் ஜாதவ் வீழ்த்தினார்.

    பாகிஸ்தான் 121 ரன்னுக்குள் 7 விக்கெட்டை இழந்தது. 8-வது விக்கெட்டுக்கு பஹீம் அஷ்ரப் உடன் முகமது அமிர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. 38.4 ஓவரில் பாகிஸ்தான் 150 ரன்னைக் கடந்தது.



    பஹீம் அஷ்ரப் 21 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். பஹீம் - முகமது அமிர் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 37 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த ஹசன் அலி 1 ரன் எடுத்த நிலையில் புவனேஸ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டாக உஸ்மான் கான் களம் இறங்கினார். இவர் பும்ரா பந்தில் ஸ்டம்பை பறிகொடுக்க பாகிஸ்தான் 43.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 162 ரன்னில் சுருண்டது.

    இந்திய அணி சார்பில் புவனேஸ்வர் குமார், கேதர் ஜாதவ் தலா மூன்று விக்கெட்டுக்களும், பும்ரா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்ய இருக்கிறது.
    Next Story
    ×