search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கேப்டன் ரோகித் சர்மா - ஹாங்காங் கேப்டன் அன்சூமாத் ராத்
    X
    இந்திய கேப்டன் ரோகித் சர்மா - ஹாங்காங் கேப்டன் அன்சூமாத் ராத்

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-ஹாங்காங் அணிகள் இன்று மோதல்

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. #AsiaCup2018 #INDvHK
    துபாய்:

    14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங் களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்-4’ சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் துபாயில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. ஹாங்காங் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 116 ரன்னில் சுருண்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது.

    கேப்டன் விராட்கோலிக்கு இந்த போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் காணுகிறது. இந்திய அணியில் பேட்டிங்கில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், கேதர் ஜாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். முன்னாள் கேப்டன் டோனி பேட்டிங் பார்ம் எப்படி? இருக்கும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. அவர் வழக்கமாக களம் காணும் வரிசையில் இருந்து மாறி முன்னதாக களம் இறங்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அடுத்த நாளில் பாகிஸ்தானை சந்திக்க இருப்பதால் இந்திய அணி தனது பேட்டிங் வரிசையை பலப்படுத்த பரிசோதனை முயற்சியில் ஈடுபடக்கூடும்.

    பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார் ஆகியோரும், சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரும் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். காயத்தில் இருந்து மீண்டு வந்து இருக்கும் புவனேஷ்வர்குமார் தனது அனுபவ பந்து வீச்சின் மூலம் ஜொலிப்பார் எனலாம். வலுவான இந்திய அணியை கத்துக்குட்டி அணியான ஹாங்காங் சமாளிப்பது கடினமானதாகும். ஆச்சரியம் நடந்தால் மட்டுமே அந்த அணி தொடக்க ஆட்டத்தில் கண்ட சரிவில் இருந்து மீண்டு வந்து இந்திய அணிக்கு சவால் அளிக்க முடியும்.

    இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழையும் முனைப்பில் உள்ளது. ஹாங்காங் அணி தோல்வி கண்டால் போட்டியில் இருந்து வெளியேறி விடும். இரு அணிகளும் இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. 2008-ம் ஆண்டில் ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் மோதிய அந்த சந்திப்பில் இந்திய அணி 256 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை விரட்டியடித்து இருந்தது.

    இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணிகள் பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், அம்பத்தி ராயுடு, மனிஷ் பாண்டே அல்லது கேதர் ஜாதவ், டோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ்.

    ஹாங்காங்: அன்சூமான் ராத் (கேப்டன்), பாபர் ஹயாத், கின்ஜித் ஷா, கிறிஸ்டோபர் கார்டர், இசான் கான், அய்ஜாஸ் கான், ஸ்காட் மெக்கெச்னி, தன்விர் அப்சல், இசான் நவாஸ், நதீம் அகமது, நிஜாகட் கான்.

    இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.  #AsiaCup2018 #INDvHK
    Next Story
    ×