search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பை - இலங்கை அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது வங்காளதேசம்
    X

    ஆசிய கோப்பை - இலங்கை அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது வங்காளதேசம்

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது வங்காளதேசம். #AsiaCup2018 #BANvSL
    துபாய் :

    14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நேற்று தொடங்கியது.
      
    துபாயில் தொடங்கிய முதல் போட்டியில் இலங்கை, வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால், லிடன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர்.  

    முதல் ஓவரில் தொடக்க ஆட்டக்காரர்களை வெளியேற்றி வங்காளதேசத்தினருக்கு அதிர்ச்சி அளித்தார் மலிங்கா. முதல் ஓவரின் 5-ம் பந்தில் லிடன் தாஸ், கடைசி பந்தில் சகிப் அல் அசன் ஆகியோரை அவுட்டாக்கினார்.

    லக்மல் வீசிய இரண்டாவது ஓவரின் கடைசி பந்து தமிம் இக்பாலின் இடது கையை பதம் பார்த்ததால், வலியில் துடித்த அவர் (2 ரன்) ரிட்டையர்டு ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார்.

    இதையடுத்து ஜோடி சேர்ந்த முஷ்பிகுர் ரஹிம், மொகமது மிதுன் ஆகியோர் 133 ரன்கள் சேர்த்தனர். மிதுன் (63), மகமதுல்லா (1), உசைன் (1), மிராஜ் (15), மோர்தாசா (11), ருபேல் (2), ரஹ்மான் (10) ரன்களில் ஆட்டமிழந்தனர். ரஹீம் 4 சிக்சர்கள், 11 பவுண்டரிகள் அடித்து 144 ரன்களை குவித்து இறுதியில் ஆட்டமிழந்தார்.

    தமிம் இக்பால் (2) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் வங்காளதேச அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்கள் எடுத்தது.

    இலங்கை அணி சார்பில் மலிங்கா 4 விக்கெட்டும், தனஞ்செயா டி சில்வா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.



    இதைத்தொடர்ந்து, 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக உபுல் தரங்காவும், குசால் மெண்டிசும் இறங்கினர்.

    வங்காளதேச அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இலங்கை அணி வீரர்களை விரைவில் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தனர்.

    உபுல் தரங்கா 27 ரன்னிலும், குசால் பெராரா 11 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 16 ரன்னிலும் அவுட்டாகினர். மற்றவர்கள் ஒற்றை இலக்க எண்ணில் அவுட்டாகினர். 19வது ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்து இலங்கை அணி தத்தளித்தது.

    இறுதியில், கடைநிலை வீரர்கள் ஓரளவு போராடினர். தில்ருவான் பெராரா 29 ரன்னிலும், சுரங்கா லக்மல் 20 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், இலங்கை அணி 35.2 ஓவரில் 124 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனால் வங்காளதேசம் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    வங்காளதேசம் அணி சார்பில் மோர்டசா, முஸ்டாபிஜுர் ரஹ்மான், மெஹிதி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். #AsiaCup2018 #BANvsSL
    Next Story
    ×