search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் திட்டம் இல்லை - ஜேம்ஸ் ஆண்டர்சன்
    X

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் திட்டம் இல்லை - ஜேம்ஸ் ஆண்டர்சன்

    ‘சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து உடனடியாக ஓய்வு பெறும் திட்டம் எதுவும் இல்லை’ என்று இங்கிலாந்து டெஸ்ட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்தார். #JamesAnderson #Retirement #England
    லண்டன்:

    இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன், சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தி கலக்கினார். கடந்த செவ்வாய்க்கிழமை லண்டன் ஓவல் மைதானத்தில் முடிந்த இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கடைசி விக்கெட்டாக முகமது ஷமியை போல்டு செய்தார்.



    இதன் மூலம் ஆண்டர்சன் 143 டெஸ்டில் விளையாடி மொத்தம் 564 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மேலும் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் 4-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத்தை பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை ஆண்டர்சன் தன்வசப்படுத்தினார். அத்துடன் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை மெக்ராத்திடம் (563 விக்கெட்டுகள், 124 டெஸ்டில்) இருந்து தட்டிப் பறித்து தனக்கு சொந்தமாக்கினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் முரளிதரன் (இலங்கை), வார்னே (ஆஸ்திரேலியா), கும்பிளே (இந்தியா) ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

    சாதனை படைத்த 36 வயதான இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியதில் மெக்ராத்தின் சாதனையை நான் முறியடித்து இருந்தாலும், என்னை விட சிறந்த பவுலர் மெக்ராத் தான். பவுன்ஸ், ஸ்விங் செய்வது, தளர்வின்றி கடுமையாக பந்து வீசுவது, துல்லியமாக, ஆக்ரோஷமாக செயல்படுவது உள்ளிட்ட எல்லா விஷயங்களிலும் மெக்ராத் என்னை விட உயர்வானவர். அவரது பந்து வீச்சின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து தான் எனது கருத்தை தெரிவிக்கிறேன்.

    போட்டிக்கு மெக்ராத் தயார் ஆகும் விதத்தை நான் கவனித்து இருக்கிறேன். அது எனக்கு உதவிகரமாக இருந்து இருக்கிறது. தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் திட்டம் எதுவும் எனக்கு இல்லை. 2006-ம் ஆண்டு ஆஷஸ் போட்டி தொடரில் மெக்ராத் கலந்து கொள்ளும் போது ஓய்வு பெறும் எண்ணம் எதுவும் இல்லையாம். ஆனால் அந்த போட்டி தொடர் முடிவில் அவருக்கு ஓய்வு எண்ணம் உதித்து விடைபெற்றதாக கருத்து தெரிவித்ததை நான் படித்து இருக்கிறேன். அதுபோல் எனக்கும் நடக்கலாமே? அது யாருக்கு தெரியும்.

    ஓய்வு எண்ணம் இதுவரை எனது மனதில் உதிக்கவில்லை. அது குறித்து நான் சிந்திப்பதும் கிடையாது. சிறந்த திறனை வெளிப்படுத்துவதிலும், அடுத்த போட்டி மற்றும் அடுத்த தொடர் குறித்து மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். இலங்கை போட்டி தொடருக்கு முன்பு எங்களுக்கு போதிய இடைவெளி இருக்கிறது. இலங்கை தொடரில் சிறப்பாக பந்து வீச முயற்சிப்பேன்.

    இவ்வாறு ஆண்டர்சன் கூறினார்.  #JamesAnderson #Retirement #England
    Next Story
    ×