search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓவல் டெஸ்ட் -  இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/6
    X

    ஓவல் டெஸ்ட் - இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/6

    இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174 ரன்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகிறது. #ENGvIND
    லண்டன்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. 

    டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர் குக் அரை சதமடித்து 71 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலியும் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறிது நேரத்தில் அடில் ரஷித் அவுட்டானார். ஆனால், ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லர் ஜோடி இந்திய அணியை நன்கு சோதித்தது. 

    ஆனால், உணவு இடைவேளைக்கு பிறகு ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லரை ரவீந்திர ஜடேஜா அபாரமாக வெளியேற்றினார். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும், ஷிகர் தவானும் களமிறங்கினர்.

    ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் ஷிகர் தவானை 3 ரன்னில் வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார் ஸ்டூவர்ட் பிராடு. அவரை தொடர்ந்து புஜாரா களமிறங்கினார்.

    ராகுலும், புஜாராவும் நிதானமாக ஆடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். ஆனால், அணியின் எண்ணிக்கை 70 ஆக இருக்கும் போது ராகுல் 37 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடந்து புஜாராவும் 37 ரன்களில் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து களமிறங்கிய ரகானே வந்த வேகத்திலேயே ரன் ஏதும் அடிக்காமல் அவுட்டாகி பெவிலியன் திரும்பியதால், இந்திய அணி 103 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.



    பின்னர் கேப்டன் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த அறிமுக வீரர் விகாரி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அணியின் எண்ணிக்கை மெல்ல உயர்ந்தது. 

    எனினும் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 49  ரன்களில் அரை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் 5 ரன்களில் ஆட்டமிழந்ததால் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 174 ரன்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகிறது.

    விகாரி 25 ரன்களுடனும், ஜடேஜா 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் மற்றும் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுக்களையும், பிராட் மற்றும் குர்ரண் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

    முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியை விட இந்தியா 158 ரன்கள் பின் தங்கியுள்ளது. #ENGvIND
    Next Story
    ×