search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக துப்பாக்கி சுடுதல் போட்டி - இந்திய இளம் வீரர் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்று சாதனை
    X

    உலக துப்பாக்கி சுடுதல் போட்டி - இந்திய இளம் வீரர் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்று சாதனை

    உலக துப்பாக்கி சுடுதல் ஜூனியர் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பந்தயத்தில் இந்திய இளம் வீரர் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். #SaurabhChaudhary #ShooterWorldChampionship
    சாங்வான்:

    உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஜூனியர் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பந்தயத்தில் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 245.5 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் ஜூன் மாதம் நடந்த உலக கோப்பை ஜூனியர் போட்டியில் இதே பந்தயத்தில் தான் படைத்து இருந்த உலக சாதனையை (243.7 புள்ளிகள்) சவுரப் சவுத்ரி தகர்த்து நேற்று புதிய சாதனை படைத்தார்.



    உத்தரபிரதேசத்தை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவரான சவுரப் சவுத்ரி சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் தென்கொரியா வீரர் லிம் ஹோஜின் (243.1 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும், மற்றொரு இந்திய வீரர் அர்ஜூன் சிங் சீமா (218 புள்ளிகள்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். இதன் அணிகள் பிரிவில் சவுரப் சவுத்ரி, அர்ஜூன் சிங் சீமா, அன்மோல் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1730 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை வென்றது. தென்கொரியா அணி (1,732 புள்ளிகள்) புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தது. ரஷிய அணி (1,711 புள்ளிகள்) வெண்கலப்பதக்கம் பெற்றது.

    ஜூனியர் ஆண்களுக்கான டிராப் அணிகள் போட்டியில் அமன் அலி எலாஹி, விவான் கபூர், மனவ்ஆதித்யா சிங் ரதோர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 348 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியது. ஆஸ்திரேலிய அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்தியா இதுவரை 4 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்கள் வென்று 3-வது இடத்தில் உள்ளது. #SaurabhChaudhary  #ShooterWorldChampionship 
    Next Story
    ×