search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குத்துச்சண்டை, ஸ்குவாஷ் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம் கிடைக்குமா?
    X

    குத்துச்சண்டை, ஸ்குவாஷ் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம் கிடைக்குமா?

    ஆசிய விளையாட்டுப் போட்டியின் 14-வது நாளான இன்று குத்துச்சண்டை, ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம் கிடைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. #asiangames2018
    ஜகார்தா:

    18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி ஜகார்தா மற்றும் பாலெம்பேங் நகரில் நடைபெற்று வருகிறது.

    13-வது நாளான நேற்று இந்தியாவுக்கு 6 பதக்கம் கிடைத்தது. பாய்மரபடகு போட்டியில் சுவேதா, வர்ஷா கவுதம் ஆகியோர் அடங்கிய இந்திய அணி (49 இ.ஆர்.எப்.எக்ஸ் வகை) வெள்ளிப்பதக்கம் வென்றது. இதேபோல பெண்கள்  ஹாக்கியிலும் வெள்ளி கிடைத்தது.

    பாய்மர படகு போட்டியில் ஹர்சிதா தோமர் (ஓபன் லேசர் 4.7 பிரிவு) வருண் தாக்கர்- கணபதி சென்னப்பா (49 இ.ஆர்) ஜோடி மற்றும் விகாஸ் கிருஷ்ணன் (குத்துச்சண்டை) ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

    மேலும் சவுரவ் கோ‌ஷல், ஹரீந்தர், பால்சிங் சாந்து, ரமீத் தண்டன், மகேஷ் மாங் கோகர் ஆகியோர் அடங்கிய ஸ்குவாஷ் ஆண்கள் அணி வெண்கலம் பெற்றது. இந்தியா 13 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலம் ஆக மொத்தம் 65 பதக்கம் பெற்று 8-வது இடத்தில் இருக்கிறது.

    ஆசிய விளையாட்டுப் போட்டியின் 14-வது நாளான இன்று இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம் கிடைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    குத்துச்சண்டையின் 49 கிலோ பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அவர் உஸ்பெகிஸ்தானை சேர்ந்த டஸ்மட்டோவை சந்திக்கிறார்.

    இதில் வென்றால் அமித் தங்கம் வென்று புதிய வரலாறு படைப்பார். தோற்றால் வெள்ளிப்பதக்கம் கிடைக்கும்.

    ஸ்குவாஷ் பெண்கள் அணிகள் பிரிவில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

    ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனயா குருவில்லா, தன்வி கண்ணா ஆகியோர் அடங்கிய இந்திய அணி இன்று பிற்பகல் நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆங்காங்கை எதிர்கொள்கிறது. இந்திய பெண்கள் ஸ்குவாஷ் அணி ஆங்காங்கை வீழ்த்தி தங்கம் வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. தோற்றால் வெள்ளி கிடைக்கும்.

    ஆசிய விளையாட்டுப் போட்டி நாளையுடன் முடிகிறது. டிரையத்லான் போட்டி மட்டும் நாளை நடக்கிறது.

    இந்திய அணி இதுவரை 65 பதக்கம் பெற்றுள்ளது. இன்று 2 பதக்கம் உறுதியாகி உள்ளது. #asiangames2018
    Next Story
    ×