search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோலி, ரகானே அபார ஆட்டம் - இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 307 ரன்கள் குவிப்பு
    X

    கோலி, ரகானே அபார ஆட்டம் - இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 307 ரன்கள் குவிப்பு

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கோலி மற்றும் ரகானேவின் அபார ஆட்டத்தினால் இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 307 ரன்கள் குவித்துள்ளது. #ENGvIND #INDvENG
    நாட்டிங்காம்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்தியா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

    இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் இறங்கினர்.
    இந்த ஜோடி மிகவும் நிதானமாக ஆடி அரை சதத்தை கடந்தது. அணியின் எண்ணிக்கை 60 ஆக இருக்கும்போது ஷிகர் தவான் 7 பவுண்டரிகளுடன் 35 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து புஜாரா களமிறங்கினார்.

    சிறிது நேரத்தில் பொறுமையுடன் விளையாடிய லோகேஷ் ராகுல் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய புஜாராவும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் 14 ரன்களில் வெளியேறினார்.

    அடுத்து களமிறங்கிய ரகானே விராட் கோலிக்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்.
    இருவரும் நிதானமாக விளையாடினர். எளிதான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டவும் தவறவில்லை.

    தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி தனது 18-வது அரை சதத்தை கடந்தார். அவருடன் ஆடிய ரகானேவும்  13-வது அரை சதத்தை கடந்தார். அணியின் எண்ணிக்கை 241 ஆக இருக்கும்போது, ரகானே 81 ரன்களில் வெளியேறினார்.

    அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலியும் ரகானேவும் இணைந்து 159 ரன்கள் சேர்த்தனர். 16 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தில் 150 ரன்களை குவித்த ஜோடி எனும் சாதனையை விராட் கோலி - அஜிங்க்யா ரகானே ஜோடி படைத்தது.

    ஆனால், முதல் டெஸ்டை போலவே இந்த டெஸ்டிலும் சதம் விளாசுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 97 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஷித் சுழலில் ஸ்டோக்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.



    இதைத்தொடர்ந்து, இன்றைய டெஸ்ட் மூலம் அறிமுகமான இளம் வீரர் ரிஷப் பண்ட் 6-வது விக்கெட்டுக்கு பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை நிதானத்துடன் எதிர்கொண்டு விளையாடினர்.

    எனினும், இன்றைய ஆட்டம் முடிய சில நிமிடங்கள் முன்னதாக 18 ரன்கள் அடித்திருந்த பாண்டியா, ஆண்டர்சன் வீசிய 86-வது ஓவரின் கடைசி பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

    இதனால், 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு இந்திய அணி 307 ரன்களை குவித்தது. 32 பந்துகளில் 22 ரன்கள் அடித்த பண்ட் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

    இங்கிலாந்து அணி தரப்பில் வோக்ஸ் 3 விக்கெட்டுக்களையும், ஆண்டர்சன், பிராட் மற்றும் ரஷித் ஆகியோர் தலா 1 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். #ENGvIND #INDvENG
    Next Story
    ×