search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடக்கம்
    X

    45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடக்கம்

    45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. #AsianGames2018
    ஜகர்தா:

    ஒலிம்பிக்குக்கு அடுத்து மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய விளையாட்டு போட்டி 1951-ம் ஆண்டு டெல்லியில் முதல்முறையாக நடத்தப்பட்டது. அதன் பிறகு இந்த போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.

    இதன்படி 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் இன்று (சனிக்கிழமை) முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்தோனேஷியா ஆசிய விளையாட்டை நடத்துவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 1962-ம் ஆண்டு அங்கு இந்த போட்டி நடந்து இருக்கிறது.

    ஆசிய விளையாட்டு இரண்டு நகரங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இதில் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், மலேசியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    தடகளம், வில்வித்தை, டென்னிஸ், பேட்மிண்டன், பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, கால்பந்து, ஆக்கி, நீச்சல், துப்பாக்கி சுடுதல் உள்பட 40 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் கபடி, ஸ்குவாஷ், சீட்டாட்டம் (பிரிட்ஜ்) உள்ளிட்ட ஒலிம்பிக்கில் அல்லாத 8 விளையாட்டுகளும் அடங்கும்.

    1982-ம் ஆண்டில் இருந்து பதக்கப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வரும் சீனா மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் 879 வீரர், வீராங்கனைகளை களம் இறக்குகிறது. கடந்த (2014-ம் ஆண்டு) ஆசிய விளையாட்டில் சீனா 151 தங்கம் உள்பட 345 பதக்கங்களை அள்ளி குவித்து இருந்தது. ஜப்பான், தென்கொரியா, ஈரான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளும் பதக்க வேட்டையாடும் வேட்கையில் உள்ளன.

    இந்திய அணியில் இடம் பிடித்துள்ள 572 வீரர், வீராங்கனைகள் 36 பந்தயங்களில் களம் காணுகிறார்கள். சுஷில் குமார் (மல்யுத்தம்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), ஹிமா தாஸ் (400 மீட்டர் ஓட்டம்), மானு பாகெர் (துப்பாக்கி சுடுதல்), பி.வி.சிந்து (பேட்மிண்டன்), வினேஷ் போகத் (மல்யுத்தம்), விகாஷ் கிருஷ்ணன், சர்ஜூபாலாதேவி (குத்துச்சண்டை), தீபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்ஸ்), மானிகா பாத்ரா (டேபிள் டென்னிஸ்) உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் தங்கப்பதக்கம் வெல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது. இதே போல் கபடி மற்றும் ஆண்கள் ஆக்கியில் இந்தியா பட்டத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு பிரகாசமான வாய்ப்பு தென்படுகிறது.

    கடந்த முறை இந்தியா 11 தங்கம் உள்பட 57 பதக்கங்களை வசப்படுத்தியது. இந்த முறை அதை விட கூடுதலாக பதக்கங்களை வெல்வோம் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

    முதல் நாளான இன்று தொடக்க விழா மட்டுமே நடைபெறும். மறுநாளில் இருந்து தான் போட்டிகள் ஆரம்பிக்கும். கோலாகலமான தொடக்க விழா ஜகர்தாவில் உள்ள ஜி.பி.கே. ஸ்டேடியத்தில் அரங்கேறுகிறது. விழாவில், கலாசாரத்தை பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகள், லேசர் ஒளி வெள்ளத்தில் வியப்பூட்டும் சாகசங்கள், வாணவேடிக்கை உள்ளிட்டவை இடம் பெறுகிறது. 4 ஆயிரம் கலைஞர்கள் தொடக்க விழாவில் ரசிகர்களை பரவசப்படுத்த காத்திருக்கிறார்கள்.

    தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அணிவகுத்து செல்வார்கள். இந்திய குழுவுக்கு ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தேசிய கொடி ஏந்தி தலைமை தாங்கி செல்கிறார். பரம எதிரிகளான வடகொரியாவும், தென்கொரியாவும், குளிர்கால ஒலிம்பிக்கை தொடர்ந்து இந்த போட்டியிலும் ஒரே கொடியின் கீழ் அணிவகுத்து செல்ல இருப்பது சிறப்பம்சமாகும்.

    ஜகர்தா நகரம், காற்றுமாசு காரணமாக அல்லோல்படுகிறது. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் காற்றின் தரம் குறைந்து, புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஜகர்தாவில் 1 கோடியே 80 லட்சம் கார்கள் ஓடுகின்றன.

    காற்று மாசு, வீரர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. உள்அரங்க விளையாட்டு போட்டிகளில் இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் தடகளம், வில்வித்தை, பேஸ்பால், சாப்ட்பால், ரக்பி போன்ற திறந்தவெளியில் நடத்தப்படும் போட்டிகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஆனாலும் காற்றின் மாசுத்தன்மையை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் தொடக்க விழாவை சோனி இ.எஸ்.பி.என்., சோனி டென்2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. #AsianGames2018

    Next Story
    ×