search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்- ரி‌ஷப் பாண்ட்டுக்கு வாய்ப்பு?
    X

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்- ரி‌ஷப் பாண்ட்டுக்கு வாய்ப்பு?

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கு பதிலாக இளம் வீரர் ரிஷாப் பாண்ட் இடம் பெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #ENGvIND #INDvEng
    நாட்டிங்காம்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    பர்கிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வென்றது. இதனால் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

    நாட்டிங்காமில் முதல் டெஸ்டில் போராடி தோற்ற இந்தியா 2-வது டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் படுதோல்வி அடைந்தது.

    பேட்ஸ்மேன்கள் சொதப்பி வருவது இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. இதில் இருந்து மீண்டு வருவது அவசியம். விராட் கோலி மட்டுமே நல்ல நிலையில் இருக்கிறார்.

    ஆனால் அவர் 2-வது டெஸ்ட் போட்டியின் போது முதுகுவலியால் அவதிப்பட்டார். அதில் இருந்து குணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மற்ற பேட்ஸ்மேன்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து ஆடினால் மட்டுமே எழுச்சி பெற முடியும். தவறுகளில் பாடம் கற்று கொண்டு திறமையை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

    2-வது டெஸ்டில் வீரர்கள் தேர்வில் தவறு செய்தனர். இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம்இறங்கியது பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே ஆடும் லெவனை தேர்வு செய்வதில் கவனம் செலுத்துவது மிக முக்கியம்.

    காயத்தில் இருந்து குணமடைந்ததால் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இடம் பெற வாய்ப்பு உள்ளது. இதே போல் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கு பதிலாக இளம் வீரர் ரிஷாப் பாண்ட் இடம் பெறலாம்.



    கடந்தபோட்டியில் நீக்கப்பட்ட தொடக்க வீரர் ஷிகர் தவான் திரும்பவும் வாய்ப்பு உள்ளது.

    தோல்விகளால் இந்திய வீரர்கள் மீது கடும் விமர்சனங்கள் பாய்ந்து வருகிறது. இதனால் நாளை தொடங்கும் டெஸ்டில் நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் இந்திய வீரர்கள் உள்ளனர். மேலும் இப்போட்டியில் தோற்றால் தொடரை இழக்க வேண்டியதுதான்.

    அப்படி நடக்கும் பட்சத்தில் இந்திய வீரர்கள் மீதான விமர்சனங்கள் கடுமையாக மாறும். இதனால் 3-வது டெஸ்டில் கண்டிப்பாக எழுச்சி பெற்று வெற்றி பெற இந்திய வீரர்கள் போராடுவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சில் பலமாக இருக்கிறது. ஆண்டர்சன், பிராட், சாம்குர்ரன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். முதல் 2- டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளதால் இங்கிலாந்து அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. 3-வது டெஸ்டிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் அந்த அணி உள்ளது. #ENGvIND #INDvEng
    Next Story
    ×