search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லார்ட்ஸ் படுதோல்வி- ரசிகர்களுக்கு கேப்டன் விராட் கோலி உருக்கமான வேண்டுகோள்
    X

    லார்ட்ஸ் படுதோல்வி- ரசிகர்களுக்கு கேப்டன் விராட் கோலி உருக்கமான வேண்டுகோள்

    லார்ட்ஸ் படுதோல்வியால் கோபம் அடைந்துள்ள ரசிகர்களுக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார் #ViratKohli
    லண்டன் லார்ட்ஸில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது. 1974-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் சந்தித்த மோசமான தோல்வி இதுவாகும்.

    இந்திய அணி முதல் இன்னிங்சில் 107 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 130 ரன்னிலும் ‘ஆல்-அவுட்’ ஆனது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 88.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக  கிறிஸ் வோக்ஸ் 137 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணியில் இரண்டு இன்னிங்சிலும் அஸ்வின்தான் (29 ரன்கள், ஆட்டம் இழக்காமல் 33 ரன்கள்) அதிகபட்ச ரன் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

    இந்திய அணி போராட்டம் இல்லாமல் இங்கிலாந்து அணியிடம் பணிந்தது கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது.



    இந்திய அணி மீது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், விராட் கோலி தனது முகநூல் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், விராட் கோலி  கூறும் போது,:- “ சில நேரம் நாம் வெற்றி பெறுவோம், சில நேரம் நாம் கற்றுக்கொள்வோம்.  எங்கள் மீதான நம்பிக்கையை நீங்கள் ஒருபோதும் கைவிட்டு விடாதீர்கள், நாங்களும், நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் முயற்சியையும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” இவ்வாறு விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×