search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவாஸ்கரை தொடர்ந்து இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் கபில்தேவும் பங்கேற்க மறுப்பு
    X

    கவாஸ்கரை தொடர்ந்து இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் கபில்தேவும் பங்கேற்க மறுப்பு

    கவாஸ்கரை தொடர்ந்து கபில் தேவும் இம்ரான்கான் பதவியேற்பு விழாவை புறக்கணித்து உள்ளார். #KapilDev #SunilGavaskar #ImranKhan

    மும்பை:

    பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரீக்-இ- இன்ஷாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் அந்த கட்சி ஆட்சி அமைக்கிறது.

    பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் வருகிற 18-ந்தேதி பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் தனது நெருங்கிய நண்பர்களுமான கபில்தேவ், நவ்ஜோத்சிங் சித்து ஆகியோருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதேபோல இந்தி நடிகர் அமீர்கானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    இம்ரான்கானின் அழைப்பை ஏற்று கபில்தேவும், சித்துவும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதாக அறிவித்து இருந்தனர். அவர்கள் மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    பதவியேற்பு விழாவில் பங்கேற்க கவாஸ்கர் மறுத்துவிட்டார். தனக்கு வர்ணனை செய்யும் பணி இருப்பதால் கலந்து கொள்ள இயலாது என்று அவர் தெரிவித்தார்.

     


     

    இந்த நிலையில் கவாஸ்கரை தொடர்ந்து கபில் தேவும் இம்ரான்கான் பதவி யேற்பு விழாவை புறக்கணித்து உள்ளார்.

    தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னால் இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இயலாது என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கபில்தேவ் பதவியேற்பு விழாவை புறக்கணித்தாக கூறப்படுகிறது.

    முன்னாள் கிரிக்கெட் வீரர்களில் சித்து மட்டுமே இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் விசா கேட்டு விண்ணப்பித்து உள்ளார். பாலிவுட் பிரபலமான அமீர்கான் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்கிறாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

    Next Story
    ×