search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் டிராகன்ஸ் வீரர்கள் - மதுரை பாந்தர்ஸ் வீரர்கள்
    X
    திண்டுக்கல் டிராகன்ஸ் வீரர்கள் - மதுரை பாந்தர்ஸ் வீரர்கள்

    டிஎன்பிஎல் 2018: முதலாவது தகுதி சுற்றில் திண்டுக்கல் - மதுரை அணிகள் இன்று மோதல்

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது? என்பதை நிர்ணயிக்கும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் நெல்லையில் இன்று மோதுகின்றன. #TNPL2018
    நெல்லை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த ஜூன் 11-ந் தேதி தொடங்கி நெல்லை, நத்தம் (திண்டுக்கல்), சென்னை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி விட்டது. நேற்று முன்தினத்துடன் 28 லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்தன.

    லீக் ஆட்டங்கள் முடிவில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நிகர ரன்-ரேட் (+0.992) அடிப்படையில் முதலிடம் பிடித்தது. மதுரை பாந்தர்ஸ் அணி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றாலும், நிகர ரன்-ரேட் (+0.124) அடிப்படையில் 2-வது இடம் பெற்றது. கோவை கிங்ஸ் அணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றதுடன், நிகர ரன்-ரேட் (+0.577) அடிப்படையில் 3-வது இடத்தை பிடித்தது. காரைக்குடி காளை அணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றாலும், நிகர ரன்-ரேட் (+0.505) அடிப்படையில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் 5-வது இடத்தையும், திருச்சி வாரியர்ஸ் 6-வது இடத்தையும், காஞ்சி வீரன்ஸ் 7-வது இடத்தையும், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கடைசி இடத்தையும் பிடித்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின. இந்த போட்டி தொடரில் நேற்று ஓய்வு நாளாகும்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதலாவது தகுதி சுற்று (பிளே-ஆப்) ஆட்டத்தில் முதலிடம் பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, 2-வது இடம் பெற்ற மதுரை பாந்தர்ஸ் அணியுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி வருகிற 12-ந் தேதி சென்னையில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். இதில் தோல்வி காணும் அணி நத்தத்தில் 10-ந் தேதி நடைபெறும் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் விளையாட வேண்டும். அதில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.

    திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கடந்த ஆண்டில் 6-வது இடம் பிடித்து இருந்தது. இந்த சீசனில் அந்த அணியின் கேப்டன் ஆர்.அஸ்வின் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருப்பதால் பெரும்பாலான ஆட்டங்களில் ஜெகதீசன் தான் அணியை வழிநடத்தினார். அவர் இதுவரை 3 அரைசதம் உள்பட 302 ரன்கள் குவித்துள்ளார். விவேக், ஹரி நிஷாந்த் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் முகமது, அபினவ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    கடந்த 2 சீசனிலும் ஒரு வெற்றியை கூட பெறாத மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளர் மற்றும் வீரர்கள் மாற்றத்தால் புதுப்பொலிவு பெற்றுள்ளது. டி.ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணி இந்த சீசனில் இதுவரை 2 ஆட்டத்தில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. மதுரை பாந்தர்ஸ் அணியின் பேட்டிங்கில் அருண் கார்த்திக் (3 அரை சதம் உள்பட 307 ரன்கள்) முதுகெலும்பாக விளங்கி வருகிறார். தலைவன் சற்குணம், கவுசிக், ஷிஜித் சந்திரன் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல பங்களிப்பை அளித்து வருகின்றனர். பந்து வீச்சில் ரஹில் ஷா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க மதுரை பாந்தர்ஸ் அணி முயற்சிக்கும். அதே நேரத்தில் இறுதிப்போட்டியை எட்ட திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தனது முழு பலத்தையும் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. 3 தடவையும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தான் வெற்றி பெற்றுள்ளது. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    இந்த போட்டி குறித்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பயிற்சியாளர் வெங்கட்ரமணா கருத்து தெரிவிக்கையில், ‘வீரர்கள் தேர்வு முறை காரணமாக இந்த சீசனில் புதிய சாம்பியன் உருவாக வாய்ப்பு கிடைத்துள்ளதாக நினைக்கிறேன். நாங்கள் சிறந்த வீரர்களை தக்க வைத்தோம். அவர்கள் தங்கள் திறமையை நிரூபித்து காட்டினார்கள். சூழ்நிலைக்கு தகுந்தபடி தான் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்கிறோம். எங்கள் அணியில் வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. யார் குறிப்பிட்ட நேரத்தில் பொறுப்பேற்று கொள்கிறார்களோ? அவர்கள் அணியை முன்னெடுத்து செல்கிறார்கள்’என்றார். திண்டுக்கல் அணியின் கேப்டன் ஜெகதீசன் அளித்த பேட்டியில், ‘இந்த சீசனில் எங்கள் அணி நல்ல சமபலத்துடன் உள்ளது. எங்கள் வீரர்கள் அனைவரும் பொறுப்பை உணர்ந்து விளையாடுகிறார்கள். இது எங்களுக்கு சிறப்பான சீசன் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் நாங்கள் முன்னேற்றம் கண்டு வருகிறோம். இருப்பினும் எங்கள் பந்து வீச்சில் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்’ என்று தெரிவித்தார்.

    மதுரை பாந்தர்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் தலைவன் சற்குணம் அளித்த பேட்டியில், ‘மிகவும் நேர்மறையான மனநிலையுடன் இந்த ஆட்டத்தை நாங்கள் அணுக வேண்டும். எதிரணியை வீழ்த்தி எங்களது மன உறுதியை நிரூபித்து காட்ட இது நல்ல வாய்ப்பாகும். அணியில் எல்லா பேட்ஸ்மேன்களும் நல்ல நிலையில் உள்ளனர். இதனால் என்னால் நெருக்கடி இன்றி விளையாடுவதுடன் இயல்பான ஷாட்களை விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. கடந்த முறை நான் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக ஆடினாலும், பொதுவான ஆட்டங்களில் மதுரை அணி வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவேன். இந்த முறை மதுரை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்பது எனது சவாலாக இருந்தது. கடவுள் அருளால் எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது. தற்போது நாங்கள் கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறோம்’ என்று தெரிவித்தார்.

    இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு:-

    திண்டுக்கல் டிராகன்ஸ்: ஜெகதீசன் (கேப்டன்), ஹரி நிஷாந்த், விவேக், சதுர்வேத், அனிருத், முகமது, அபினவ், சிலம்பரசன், திரிலோக் நாத், யாழ் அருண்மொழி, தோதாத்ரி.

    மதுரை பாந்தர்ஸ்: டி.ரோகித் (கேப்டன்), அருண் கார்த்திக், தலைவன் சற்குணம், கார்த்திகேயன், நாதன், கவுசிக், ஷிஜித் சந்திரன், அபிஷேக் தன்வார், கிரண் ஆகாஷ், வருண் சக்ரவர்த்தி, ரஹில் ஷா. #TNPL2018
    Next Story
    ×