search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடரை வெல்வது யார்? இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது
    X

    தொடரை வெல்வது யார்? இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்சில் இன்று நடக்கிறது. #ENGvIND #INDvENG
    லீட்ஸ்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் இங்கிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதனால் போட்டி தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்சில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    முதல் ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங், பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. ஆனால் 2-வது ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் சொதப்பலை சந்தித்தது. ஒருவர் கூட அரை சதத்தை எட்டவில்லை. லோகேஷ் ராகுல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். முன்னாள் கேப்டன் டோனி 59 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவரது நிதானமான ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது. நடுவரிசைபேட்டிங்கில் ஏற்பட்ட சறுக்கலை இந்திய அணி சரி செய்ய வேண்டியது அவசியமானதாகும்.

    அதேபோல் பந்து வீச்சும் எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் பந்து வீச்சில் நன்றாக செயல்பட்டார்கள். வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் பந்து வீச்சு எடுபடவில்லை. காயத்தில் இருந்து தேறிவரும் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் இந்த ஆட்டத்தில் களம் இறங்குவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. அவர் களம் இறங்கும் பட்சத்தில் சித்தார்த் கவுல் கழற்றி விடப்படக்கூடும்.

    இங்கிலாந்து அணி கடந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கச்சிதமாக செயல்பட்டது. அந்த அணியில் ஜோரூட் சதம் அடித்து கலக்கினார். கேப்டன் இயான் மோர்கன், ஜாசன் ராய், பேர்ஸ்டோ ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல பங்களிப்பை அளித்தனர். பந்து வீச்சில் பிளங்கெட், அடில் ரஷித், டேவிட் வில்லி ஆகியோரின் செயல்பாடு அருமையாக இருந்தது. டேவிட் வில்லி பேட்டிங்கிலும் ஜொலித்தார். இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் பேட்ஸ்மேன் ஜேம்ஸ் வின்ஸ் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

    இன்றைய ஆட்டத்தில் வெற்றி கண்டு, 20 ஓவர் போட்டி தொடரை போல் ஒருநாள் போட்டி தொடரையும் கைப்பற்ற இந்திய அணி முனைப்பு காட்டும். 2011-ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி இழந்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் சொந்த மண்ணில் தொடரை இழக்காமல் இருக்க இங்கிலாந்து அணி வெற்றிக்காக எல்லா வகையிலும் போராடும். சமபலம் வாய்ந்த இரு அணிகளும் சந்திக்கும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் 3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.

    இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு:-

    இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், சுரேஷ்ரெய்னா, டோனி, ஹர்திக் பாண்ட்யா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், சித்தார்த் கவுல் அல்லது புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல்.

    இங்கிலாந்து: இயான் மோர்கன் (கேப்டன்), ஜாசன் ராய், பேர்ஸ்டோ, ஜோரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, டேவிட் வில்லி, அடில் ரஷித், பிளங்கெட், மார்க்வுட். #ENGvIND #INDvENG
    Next Story
    ×