search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா? - நாளை கடைசி ஒருநாள் போட்டி
    X

    இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா? - நாளை கடைசி ஒருநாள் போட்டி

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் மோதும் இந்திய அணி டி20 தொடரை போல ஒருநாள் போட்டி தொடரையும் வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ENGvIND #TeamIndia
    லீட்ஸ்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

    3 ஒருநாள் போட்டியில் நாட்டிங்காமில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியசத்திலும், லண்டனில் நடந்த 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 86 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நாளை (17-ந்தேதி) நடக்கிறது.

    20 ஓவர் தொடரை வென்றது போல் ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது. 20 ஓவர் தொடரை இழந்ததால் ஒருநாள் தொடரையாவது வென்றுவிட வேண்டும் என்ற வேட்கையில் இங்கிலாந்து இருக்கிறது.

    இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்கிறது. ஒருநாள் தொடரை வெல்லப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஏமாற்றம் காணப்பட்டது. தொடக்க ஜோடியான ரோகித் சர்மா-தவானின் ஆட்டத்தை பொறுத்தே அணியின் ரன் குவிப்பு இருக்கும். இதில் தவான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதேபோல ராகுலும் அதிரடியாக ஆட வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.

    இங்கிலாந்து தொடரில் தினேஷ் கார்த்திக்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. நாளைய ஆட்டத்திலாவது கேப்டன் கோலி வாய்ப்பு வழங்குவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    பந்துவீச்சில் சுழற்பந்து வீரர் குல்தீப் யாதவ் நல்ல நிலையில் உள்ளார். அவர் 2 ஆட்டத்தில் 9 விக்கெட் எடுத்துள்ளார். மற்றொரு சுழற்பந்து வீரர் யசுவேந்திர சாஹல் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பும்ரா இல்லாததால் வேகப்பந்தில் பலவீனம் காணப்படுகிறது.

    இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் ஜோரூட், ஜேசன் ராய் ஆகியோரும், பந்துவீச்சில் டேவிட் வில்லி, ஆதில் ரஷீத் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 99-வது போட்டியாகும். இதுவரை நடந்த 98 ஆட்டத்தில் இந்தியா 40-ல், இங்கிலாந்து 53-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. 3 போட்டி முடிவு இல்லை.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    Next Story
    ×