search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎன்பிஎல்- பவர்பிளேயில் 3 விக்கெட் சரிந்ததால் தோல்வி - சேப்பாக் வீரர் ராகுல் பேட்டி
    X

    டிஎன்பிஎல்- பவர்பிளேயில் 3 விக்கெட் சரிந்ததால் தோல்வி - சேப்பாக் வீரர் ராகுல் பேட்டி

    டி.என்.பி.எல். போட்டியின் திருச்சி வாரியர்ஸ்சுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பவர்பிளேயில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் விழுந்ததால் தோல்வி அடைந்தோம் என்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் ராகுல் கூறியுள்ளார். #TNPL2018 #CSGvRTW
    சென்னை:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் விளையாடிய திருச்சி வாரியர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன் குவித்தது. பின்னர் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 31 ரன்னில் தோல்வி அடைந்தது.

    திருச்சி வாரியர்ஸ் அணி பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி இருந்தது.

    தோல்வி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்ஸ்மேன் ராகுல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    181 ரன்கள் என்பது சற்று பெரிய இலக்கு தான் இருந்தாலும் அதனை எட்ட முயற்சி செய்தோம். ஆனால் பவர்பிளேயில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் விழுந்ததால் எங்களால் இலக்கை அடைய முடியவில்லை. இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது.

    கடைசி இரண்டு ஓவர்களில் திருச்சி அணி 45 ரன்களை குவித்துவிட்டது. இது அவர்களின் நேரம் என்றே சொல்வேன். கணபதியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவருக்கான நாளாக அமைந்தது.

    இந்த ஆட்டத்தில் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்று அடுத்த போட்டியில் உத்வேகத்துடன் விளையாடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வெற்றி குறித்து திருச்சி வாரியர்ஸ் வீரர் சுரேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆடுகளம் தொடக்கத்தில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் எப்போது 2 பவுண்டரிகளை அடிக்க முடிந்ததோ, அதை நாங்கள் தொடர வேண்டும் என்று கருதினேன். கேப்டன் இந்திரஜித்தும், நானும் இணைந்து அணியின் ஸ்கோரை 160 ரன்னுக்கு உயர்த்த வேண்டும் என்று திட்டமிட்டோம். பின்னர் வந்த கணபதி அதிரடியாக ஆடி 180 ரன்னுக்கு கொண்டு வந்தார்.

    180-190 ரன் இந்த ஆடுகளத்தில் மிகச் சிறந்த ஸ்கோராகும். ஆனால் 20 ஓவர் போட்டியை பொறுத்தவரை இந்த ஸ்கோர் போதுமானது என்று யாரும் கூற முடியாது. இந்த ஆட்டத்தில் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகவும் திறமையாக செயல்பட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது 2-வது ஆட்டத்தில் மதுரை பாந்தர்சை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் நெல்லையில் நாளை (16-ந்தேதி) நடக்கிறது.

    திருச்சி வாரியர்ஸ் 3-வது ஆட்டத்தில் கோவை கிங்சை வருகிற 23-ந்தேதி திண்டுக்கல்லில் சந்திக்கிறது.

    டி.என்.பி.எல். போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நெல்லையில் நடக்கிறது. மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்ஸ்- வி.பி.காஞ்சீ வீரன்ஸ் அணிகளும், இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் லைகா கோவை கிங்ஸ்- ஐடீரிம் காரைக்குடி காளை அணிகளும் மோதுகின்றன. #TNPL2018 #CSGvRTW
    Next Story
    ×