search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    12 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பிரான்ஸ் அணி
    X

    12 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பிரான்ஸ் அணி

    உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. இந்த அணி இறுதிப் போட்டியில் குரோஷியா அல்லது இங்கிலாந்தை சந்திக்கிறது. #FifaWorldCup2018 #France
    செயின்ட்பீட்டர்ஸ்பர்க்:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறது.

    இதன் முதல் அரை இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று இரவு 11.30 மணிக்கு நடந்தது. இதில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் மோதின. இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால் ஆட்டம் தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக இருந்தது.

    ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் பெல்ஜியம் கேப்டன் ஈடன் ஹசாட் கோல் வாய்ப்பை தவற விட்டார். அவர் அடித்த பந்து கோல் கம்பத்தை விட்டு சற்று வெளியே சென்றது.

    அடுத்த 4-வது நிமிடத்தில் அவர் அடித்த வேகமான ஷாட்டை பிரான்ஸ் பின்கள வீரர் ரபெல் வரேல் தடுத்து விட்டார். 22-வது நிமிடத்தில் பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் அருமையாக தடுத்து பெல்ஜியத்துக்கு ஏமாற்றம் கொடுத்தார். டோபி ஆல்டர் அடித்த ஷாட்டை அவர் சிறப்பாக செயல்பட்டு தடுத்தார்.

    இதே போல பிரான்ஸ் அணியும் சில வாய்ப்புகளை தவற விட்டது. 39-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் பவார்ட் அடித்த பந்தை பெல்ஜியம் கோல் கீப்பர் கோர்ட்டஸ் தடுத்து விட்டார்.

    முதல் பாதியில் இரு அணிகளும் கடுமையாக கோல் அடிக்க போராடின. ஆனால் அது பலன் இல்லாமல் போனது. இதனால் முதல் பாதியில் 0-0 என்ற நிலை இருந்தது.

    2-வது பகுதி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் பிரான்ஸ் கோல் அடித்தது. 51-வது நிமிடத்தில் அந்த அணிக்கு ‘கார்னர் கிக்’ வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கிரீன்ஸ்மேன் அடித்த பந்தை பின்கள வீரரான சாமுவேல் உமிட்டி தலையால் முட்டி மிகவும் அருமையாக கோலாக்கினார். இதன் மூலம் பிரான்ஸ் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.



    கோல் வாங்கியதால் சமன் செய்ய பெல்ஜியம் போராடியது. ஆனால் அந்த அணியின் முயற்சி எடுபடாமல் போனது. 61-வது நிமிடத்தில் டி புருயன் வாய்ப்பை தவற விட்டார். 65-வது நிமிடத்தில் மெர்டன்ஸ் அடித்த பந்தை பிரான்ஸ் கோல் கீப்பர் அபாரமாக தடுத்தார். அதற்கு அடுத்த நிமிடத்தில் பெலானி தலையால் முட்டிய பந்து கோல்கம்பத்தை விட்டு சற்று விலகி சென்றது.

    81-வது நிமிடத்தில் விஸ்டல் அடித்த அதிரடியான ஷாட்டை பிரான்ஸ் கோல்கீப்பர் தடுத்தார். மேலும் முன்னணி வீரரான லுகாகுவும் சில நல்ல வாய்ப்புகளை தவறவிட்டார். பெல்ஜியத்தின் கடும் போராட்டத்துக்கு பலன் இல்லாமல் போனது.



    அதே நேரத்தில் பிரான்ஸ் 2-வது கோல் அடிக்க கிடைத்த சில வாய்ப்புகளை நழுவவிட்டது. ஜிரவுட், கிரீன்ஸ்மேன், டோலிகோ ஆகியோர் கோலாக்க தவறினர். ஆட்டத்தின் முடிவில் பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    பிரான்ஸ் கடந்த 20 ஆண்டுகளில் 3-வது முறையாக உலக கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு தகுதி பெற்றது. இதற்கு முன் 1998, 2006-ல் அந்த அணி தகுதி பெற்று இருந்தது.

    இதில் 1998-ல் சொந்த மண்ணில் நடந்த போட்டியில் பிரேசிலை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையை வென்றது. 2006-ல் இத்தாலியிடம் பெனால்டி ஷூட்டில் தோற்று கோப்பையை இழந்தது.

    பிரான்ஸ் அணி இறுதிப் போட்டியில் குரோஷியா அல்லது இங்கிலாந்தை சந்திக்கிறது.

    பெல்ஜியம் சிறப்பாக ஆடியும் கோல் அடிக்க முடியாமல் போனது அதிர்ஷ்டம் இல்லாததே காரணம். இந்த தொடரில் அபாரமாக ஆடிய அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது ஏமாற்றமே.

    பெல்ஜியம்அணி 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இன்றைய 2-வது அரை இறுதியில் தோற்கும் அணியுடன் விளையாடும். 3-வது இடத்துக்கான ஆட்டம் 14-ந் தேதியும், இறுதிப்போட்டி 15-ந் தேதியும் நடக்கிறது. #FifaWorldCup2018 #France
    Next Story
    ×