search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிராவில் முடிந்த செய்ண்ட் லூசியா டெஸ்ட் போட்டி
    X

    டிராவில் முடிந்த செய்ண்ட் லூசியா டெஸ்ட் போட்டி

    செய்ண்ட் லூசியா நகரில் நடைபெற்ற வெஸ்ட்இண்டீஸ், இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனது. #WIvSL #SLvWI

    செய்ண்ட் லூசியா:

    வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    இலங்கை அணி முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை அணியில் சந்திமால் 119 ரன்கள், குசால் மெண்டிஸ் 45 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி பந்துவீச்சில் ஷனான் கேப்ரியல் 5 விக்கெட்களும், கெமார் ரோச் 4 விக்கெட்களும் வீழ்த்தினர். 


    13 விக்கெட்கள் வீழ்த்திய ஷனான் கேப்ரியல்
     
    இதையடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 300 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஸ்மித் 61 ரன், டவ்ரிச் 55 ரன், சேஸ் 41 ரன் எடுத்தனர். இலங்கை அணி பந்துவீச்சில் லஹிரு குமாரா 4 விக்கெட்களும், கசுன் ரஜிதா 3 விக்கெட்களும், சுரங்கா லக்மல் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 47 ரன்கள் முன்னிலை பெற்றது. 

    இதையடுத்து, இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. இலங்கை அணி 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 89 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் எடுத்திருந்தது. அகிலா தனஞ்ஜெயா 16 ரன்களுடனும், சுரங்கா லக்மல் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

    நேற்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி 342 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. வெஸ்ட்இண்டீஸ் அணி பந்துவீச்சில் ஷனான் கேப்ரியல் சிறப்பாக பந்துவீசி 8 விக்கெட்கள் வீழ்த்தினார். கெமார் ரோச் 2 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 296 ரன்களை இலக்காக இலங்கை அணி நிர்ணயித்தது. 



    இதையடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிரேக் பிரத்வெய்ட், தெவான் ஸ்மித் ஆகியோர் களமிறங்கினர். ஸ்மித் 1 ரன்னிலும், அதன்பின் வந்த கெய்ரான் பவல் 2 ரன்னிலும் அடுத்தடுத்து ரஜிதா வீசிய 3-வது ஓவரில் ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து பிரத்வெய்ட் உடன் ஷாய் ஹோப் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். 

    ஷாய் ஹோப் 115 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ரோஸ்டன் சேஸ் 13 ரன்களில் கிளீன் போல்டானர். இந்த இரண்டு விக்கெட்களையும் சுரங்கா லக்மல் எடுத்தார். பிரத்வெய்ட் ஆட்டமிழக்காமல் இருக்க, எதிர்முனையில் வந்த ஷான் டவ்ரிச் 8 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் களமிறங்கினார். இருவரும் நிதானமாக விளையாடினர்.



    அப்போது மழை குறுக்கிட்டது. சிறிது நேரத்திற்கு பின் ஆட்டம் தொடங்கியது. அதன்பின் மீண்டும் குறைந்த வெளிச்சம் காரணமாக நிறுத்தப்பட்டது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்தது. பிரத்வெய்ட் 59 ரன்களுடனும், ஹோல்டர் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இதனால் இந்த ஆட்டம் டிரா ஆனது. இரண்டு இன்னிங்சிலும் சிறப்பாக பந்துவீசி 13 விக்கெட்கள் வீழ்த்திய வெஸ்ட்இண்டீஸ் அணியின் ஷனான் கேப்ரியல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    அடுத்த போட்டி, பார்படோசில் உள்ள பிரிட்ஜ்டவுன் நகரில் வருகிற 23-ம் தேதி தொடங்க உள்ளது. #WIvSL #SLvWI
    Next Story
    ×