search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷான் மார்ஷ் சதம் வீண் - இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது ஆஸ்திரேலியா
    X

    ஷான் மார்ஷ் சதம் வீண் - இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது ஆஸ்திரேலியா

    கார்டிப்பில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியா அணியை 38 ரன்கள் விழ்த்தியாசத்தில் வீழ்த்தியது. #ENGvAUS #AUSvENG

    லண்டன்:

    இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. லண்டனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், கார்டிப் பகுதியின் சோபியா மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

    இதையடுத்து, பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ஜேசன் ராய் 120 ரன்களும், ஜோஸ் பட்லர் 91 ரன்களும், பேர்ஸ்டோவ் 42 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சில் ஜேய் ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரு டை ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். 


     விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய வீரர்கள்

    இதையடுத்து, 343 ரன்களை இலக்காக கொண்டு ஆஸ்திரேலியா அணி விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட், டார்கி ஷார்ட் ஆகியோர் களமிறங்கினர். ஹெட் 19 ரன்னிலும், ஷார்ட் 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து வந்த ஷான் மார்ஷ் நிலைத்துநின்று ஆடினார். ஆனால் எதிர்முனையில் இறங்கிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் 9 ரன்னிலும், ஆரோன் பிஞ்ச் டக்-அவுட்டும் ஆகினர்.


    சதமடித்த ஷான் மார்ஷ்

    அதன்பின் மார்ஷ் உடன், கிளென் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். சிறிதுநேரம் நிலைத்து நின்று பேட்டிங் செய்த மேக்ஸ்வெல் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் மார்ஷ் உடன் ஆஸ்டன் அகார் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக பேட்டிங் செய்த மார்ஷ் சதம் அடித்தார். 
    அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அகார் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். 

    சிறப்பாக பேட்டிங் செய்த ஷான் மார்ஷ் 116 பந்தில் 131 ரன்கள் எடுத்தார். இதுதவிர டிம் பெய்ன் 15, ஆண்ட்ரூ டை 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 47.1 ஓவரில் 304 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு இந்த ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணி பந்துவீச்சில் லியாம் பிளங்கீட் 4 விக்கெட்களும், அடில் ரஷித் 3 விக்கெட்களும், மோயின் அலி 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.


    4 விக்கெட் வீழ்த்திய லியாம் பிளங்கீட்

    இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய் ஆட்டநாயகன் விருது வென்றார். அடுத்ததாக 19-ம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. #ENGvAUS #AUSvENG
    Next Story
    ×