search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார் சல்மான்கான் சகோதரர்
    X

    ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார் சல்மான்கான் சகோதரர்

    ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக நடிகர் சல்மான்கான் சகோதரிடம் மும்பை போலீசார் இன்று விசாரணை நடத்தியதில், அவர் சூதாடியதை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #ArbaazKhan #IPL
    மும்பை:

    11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 27-ந் தேதி வரை நடைபெற்றது. ஐ.பி.எல். போட்டி தொடர்பாக மும்பையில் மிகப்பெரிய அளவில் சூதாட்டம் (பெட்டிங்) நடந்ததை போலீசார் கண்டறிந்தனர். இது தொடர்பாக சூதாட்ட தரகர்கள் 3 பேர் கடந்த 16-ந் தேதி டோம்புவிலியில் பிடிபட்டனர். அவர்கள் பெட்டிங்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து 18-ந் தேதி மேலும் 2 சூதாட்ட தரகர்களும், 29-ந் தேதி சோனு ஜலான் என்ற சூதாட்ட தரகரும் கைது செய்யப்பட்டனர். சோனு ஜலான் மீது ஏற்கனவே கிரிமினல் வழக்குகள் உள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்தி நடிகரும், பாலிவுட்டின் பிரபல நட்சத்திரம் சல்மான்கானின் இளைய சகோதரருமான அர்பாஸ்கானுக்கு இதில் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து தானே குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு இன்று நேரில் ஆஜராகுமாறு நேற்று சம்மன் அனுப்பி இருந்தனர்.

    சம்மனை தொடர்ந்து இந்தி நடிகரும், தயாரிப்பாளருமான அர்பாஸ்கான் இன்று காலை தானே போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அவரிடம் ஐ.பி.எல். பெட்டிங் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். சீனியர் இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 பேர் அவரிடம் சூதாட்ட தரகர் சோனுவுடன் உள்ள தொடர்பு குறித்து தீவிரமாக விசாரணை செய்தனர்.

    எத்தனை முறை சோனு மூலம் பெட்டிங்கில் ஈடுபட்டீர்கள், இருவருக்கும் உள்ள பண பரிவர்த்தனை என்பது உள்பட பல்வேறு கேள்விகளை போலீசார் அர்பாஸ்கானிடம் கேட்டனர். அப்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டு 2.70 கோடி ரூபாய் இழந்ததாக அர்பாஸ்கான் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
    Next Story
    ×