search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 2018 சீசன் எனக்கு சிறப்பானதாக அமைந்தது- ஷேன் வாட்சன்
    X

    ஐபிஎல் 2018 சீசன் எனக்கு சிறப்பானதாக அமைந்தது- ஷேன் வாட்சன்

    ஐபிஎல் 2018 சீசன் எனக்கு மிகவும் சிறப்பானது என்று இறுதிப் போட்டியில் சதம் அடித்து ஆட்ட நாயகன் விருது பெற்ற ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். #IPL2018
    ஐபிஎல் 2018 தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் செனனை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது. பின்னர் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

    179 ரன்கள் என்ற இலக்கை 18.3 ஓவரிலேயே சேஸிங் செய்ய ஷேன் வாட்சன் முக்கிய காரணமாக இருந்தார். அவர் 57 பந்தில் 11 பவுண்டரி, 8 சிக்சருடன் 117 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஆட்ட நாயகன் விருது பெற்ற ஷேன் வாட்சன், கடந்த சீசனை விட இந்த சீசன் எனக்கு ஸ்பெஷலானது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷேன் வாட்சன் கூறுகையில் ‘‘ஐபிஎல் 2018 சீசன் எனக்கு சிறப்பான சீசன். முந்தைய 2017 சீசனோடு இந்த சீசனில் அதிக வாய்ப்பு கிடைத்தது நம்ப முடியாததாக இருந்தது.

    விஷயங்கள் அனைத்தும் என் வழியில் சரியாக அமைந்தது. ஆனாலும், இது மிகவும் பெரிய ஆட்டமான இறுதிப் போட்டியில் அமைந்தது மிகவும் சிறப்பானது. முதல் 10 பந்துகளை சந்தித்த பிறகு, பெரிய ஹிட் ஷாட் அடிப்பதற்கு முன் பந்திற்கு பந்து ரன்கள் அடிக்கலாம் என்ற நம்பிக்கை வந்தது.



    புவனேஸ்வர் குமார் முதலில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். இதனால் நாங்கள் முதல் சிக்ஸ் ஓவரில் மோசமான விளைவை சந்தித்து விடக்கூடாது (விக்கெட்டை மளமளவென இழப்பது) என்பதில் கவனமாக இருந்தோம். பந்து ஸ்விங் தன்மையை இழந்த பிறகு, பேட்டிங் செய்வதற்கு எளிதாக இருந்தது’’ என்றார்.

    கடந்த ஆண்டு ஆர்சிபி அணியில் இடம்பிடித்திருந்த ஷேன் வாட்சன், 8 போட்டியில் 71 ரன்கள் மட்டுமே அடித்தார். இந்த முறை 15 போட்டியில் 2 சதம், 2 அரைசதத்துடன் 555 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 39.64 ஆகும்.
    Next Story
    ×