search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய டே-நைட் டெஸ்டில் விளையாடாது- ஆஸ்திரேலியாவிற்கு பிசிசிஐ கடிதம்
    X

    இந்திய டே-நைட் டெஸ்டில் விளையாடாது- ஆஸ்திரேலியாவிற்கு பிசிசிஐ கடிதம்

    டிசம்பர் 6-ந்தேதி அடிலெய்டில் நடைபெறும் டெஸ்டில் இந்தியா பகல்-இரவு டெஸ்டாக ஆடாது என பிசிசிஐ ஆஸ்திரேலியாவிற்கு கடிதம் எழுதியுள்ளது. #BCCI #AUSvIND
    இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடியது. இதில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் இந்தியா இங்கிலாந்து சென்று விளையாடுகிறது. அதன்பின் இந்த வருடம் இறுதியில் ஆஸ்திரேலியா சென்று விளையாடுகிறது.

    இந்நிலையில் 2018-19-ல் ஆஸ்திரேலியா விளையாடும் சர்வதேச போட்டிகளின் முழு அட்டவணையை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. அதன்படி ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு எதிராக மூன்று டி20, நான்கு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான மைதானம், தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நான்கு டெஸ்டில் ஒரு டெஸ்ட் டிசம்பர் 6-ந்தேதி அடிலெய்டில் நடக்கிறது. கடந்த சில வருடங்களாக ஆஸ்திரேலியா அடிலெய்டில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்தி வருகிறது. இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகள் பகல்-இரவு போட்டிகளில் விளையாடியுள்ளன. இதனால் இந்தியாவும் பகல்-இரவு டெஸ்டில் விளையாட வேண்டும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்தது.

    ஆனால் இந்தியா பகல்-இரவு டெஸ்டிற்கு தயாராகவில்லை. இதனால் பகல்-இரவு டெஸ்டில் விளையாடுவது சாத்தியமில்லை என்பதை சிஓஏ தலைவர் வினோத் ராய் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில் அடிலெய்டில் பகல்-இரவு டெஸ்டில் விளையாட இயலாது என அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

    இதுகுறித்து பிசிசிஐ பொறுப்பு செயலாளர் சவுத்ரி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அதிகாரி சுதர்லேண்டுக்கு இ-மெயில் மூலம் ஒரு கடிதம் எழுதியுள்ளார். ‘‘நிர்வாகக்குழு சார்பில் இந்த செய்தியை நான் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். இந்தியா தற்போதுதான் பகல்-இரவு டெஸ்டில் விளையாட ஆரம்பித்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில், பகல்-இரவு டெஸ்டில் விளையாட வேண்டும் என்ற தங்களுடைய பரிந்துரையை எங்களால் ஏற்க முடியவில்லை. வழக்கமான முறையில் (பகல் டெஸட்) அனைத்து டெஸ்டுகளும் நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதன்மூலம் இந்தியாவின் பகல்-இரவு டெஸ்ட் தள்ளிவைக்கப்படுகிறது. இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள புஜாரா, முரளி விஜய் மட்டுமே பிங்க் பந்தில் விளையாடி உள்ளனர்.
    Next Story
    ×