search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 2018- லோ ஸ்கோர் ஆடுகளத்தில் எதிரணியை கலங்கடிக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்
    X

    ஐபிஎல் 2018- லோ ஸ்கோர் ஆடுகளத்தில் எதிரணியை கலங்கடிக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்

    குறைந்த ரன்கள் அடிக்கக்கூடிய ஆடுகளத்தில் எதிரணியை ஆல்அவுட் ஆக்கி அச்சுறுத்தும் அணியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் திகழ்கிறது. #IPL2018 #SRH
    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன் ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் போன்ற அணிகளுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டது.

    வார்னர் இல்லாத சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி எப்படி விளையாடும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த அணியில் அதிரடி பேட்ஸ்மேன்கள் இல்லை என்றாலும், 150 முதல் 170 ரன்கள் வரை அடிக்கக்கூடிய திறன் உள்ளது. அதேவேளையில் எதிரணியை அவர்கள் அடித்த ரன்னுக்குள் மடக்கக்கூடிய பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கை வைத்துள்ளது.

    ஐபிஎல் தொடரில் இதுவரை 29 போட்டிகள் முடிந்துள்ளது. பெரும்பாலான போட்டிகளில் டாஸ் வெல்லும் அணி சேஸிங்கைதான் விரும்புகிறது. சேஸிங் செய்யும் அணிக்கு பெரிய அளவில் வெற்றியும் கிடைத்துள்ளது. ஆனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் இதற்கு நேர்மாறாக உள்ளது. கடந்த 24-ந்தேதி வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது.

    வான்கடே ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 200 ரன்னுக்குள் சுருட்டினால் சேஸிங் செய்து விடலாம் என அந்த அணி நினைத்தது.



    ஆனால் ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18.4 ஓவரில் 118 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆல்ரவுட் ஆனது. ஓவருக்கு 6 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் மும்பை இந்தியன்ஸ் எளிதில் வெற்றிபெறும் என நினைத்தார்கள்.

    ஆனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நேர்த்தியான பந்து வீச்சாலும், சிறப்பான பீல்டிங்காலும் மும்பை இந்தியன்ஸ் அணியை 18.5 ஓவரில் 87 ரன்னில் சுருட்டியது. சூர்யகுமார் யாதவ் (34), குருணால் பாண்டியா (24) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்னைத் தொட்டனர். மற்ற 9 பேரும் 27 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். இரண்டு ரன்கள் எஸ்ட்ரா ஆகும். சித்தார்த் கவுல் 3 விக்கெட்டும், ரஷித் கான், பாசில் தம்பி தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    கடந்த 26-ந்தேதி சொந்த மைதானத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் மணிஷ் பாண்டேயின் அரைசதத்தால் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அங்கித் ராஜ்பூட் 4 ஓவரில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.



    பின்னர் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 2-வது பேட்டிங் செய்தது. கிறிஸ் கெய்ல், கேஎல் ராகுல், கருண் நாயர், ஆரோன் பிஞ்ச் இருந்ததால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் எளிதாக வெற்றி பெறும் என நினைத்தனர். அதற்கேற்றபடி முதல் விக்கெட்டுக்கு கிறிஸ் கெய்ல் - கேஎல் ராகுல் ஜோடி 7.5 ஓவரில் 55 ரன்கள் சேர்த்தது.

    கிறிஸ் கெய்ல் 23 ரன்னிலும், கேஎல் ராகுல் 32 ரன்னிலும் ஆட்டமிழந்த பிறகு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.2 ஓவரில் 119 ரன்னில் சுருண்டது. ரஷித் கான் 4 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். சந்தீப் ஷர்மா, பாசில் தம்பி, ஷாகிப் அல் ஹசன் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.



    குறைந்த ஸ்கோர் ஆடுகளத்தில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்றதால் ஐதராபாத் அணிக்கு அசுர நம்பிக்கை ஏற்பட்டது. இதனால் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக டாஸ் வென்று தைரியமாக பேட்டிங் தேர்வு செய்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.

    ஐதராபாத் அணியால் 151 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இருந்தாலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் நேர்த்தியான பந்து வீச்சும், அசத்தல் பீல்டிங்கும் ராஜஸ்தானை 140 ரன்னில் சுருட்டியது.

    இதனால் டாஸ் வெல்லும் அணிகள் பீல்டிங்கை தேர்வு செய்யும் நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங்கை தேர்வு செய்து அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.
    Next Story
    ×