search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    206 ரன் இலக்கை எடுத்து சென்னை வெற்றி- அம்பதி ராயுடுவுக்கு டோனி பாராட்டு
    X

    206 ரன் இலக்கை எடுத்து சென்னை வெற்றி- அம்பதி ராயுடுவுக்கு டோனி பாராட்டு

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான நேற்றைய ஆட்டத்தில் 206 ரன் இலக்கை எட்டியதற்கு முக்கிய காரணமாக இருந்த அம்பதி ராயுடுவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி பாராட்டை தெரிவித்துள்ளார்.#IPL2018 #RCB #CSK #Dhoni
    பெங்களூர்:

    11-வது ஐ.பி.எல். போட்டி யில் பெங்களூர் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது வெற்றியை பெற்றது.

    பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது.

    டிவில்லியர்ஸ் 30 பந்தில் 68 ரன்னும் (2 பவுண்டரி, 8 சிக்சர்), குயின்டன் டி காக் 37 பந்தில் 53 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்), மன்தீப்சிங் 17 பந்தில் 32 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். ஹர்துல் தாகூர், பிரோவோ, இம்ரான் தாகீர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அம்பதி ராயுடு 53 பந்தில் 82 ரன்னும் (3 பவுண்டரி, 8 சிக்சர்), கேப்டன் டோனி 34 பந்தில் 70 ரன்னும் (1 பவுண்டரி, 7 சிக்சர்) எடுத்தனர்.



    சென்னை அணி ஒரு கட்டத்தில் 9 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 74 ரன் என்ற நிலையில் இருந்தது. அதாவது 66 பந்தில் 132 ரன் தேவை என்ற நெருக்கடி இருந்தது.

    6-வது வீரராக களம் இறங்கிய டோனி, அம்பதி ராயுடுவுடன் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை மாற்றினார். 17.5-வது ஓவரில் அம்பதி ராயுடு ரன்அவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 175 ஆக இருந்தது. இருவரும் இணைந்து 55 பந்தில் 101 ரன் எடுத்தனர்.

    கடைசி இரண்டு ஓவரில் 30 ரன் தேவையில் 19 ஓவரில் 14 ரன் எடுக்கப்பட்டது சிராஜ் வீசிய அந்த ஓவரில் 5-வது பந்தில் டோனி சிக்சர் அடித்தார். எக்ஸ்ட்ரா மூலம் 3 ரன் வந்ததும் சிறப்பானது.

    கடைசி ஓவரில் 16 ரன் தேவைப்பட்டது. முதல் பந்தில் பவுண்டரியும், 2-வது பந்தில் சிக்சரும் அடித்து பிராவோ முத்திரை பதித்தார். 4-வது பந்தில் டோனி சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறியது. இந்த வெற்றி குறித்து டோனி கூறியதாவது:-

    டிவில்லியர்சின் அதிரடியான ஆட்டத்தையும், பெங்களூர் அணி 200 ரன்னை தாண்டிய போதும் வெற்றி பெறுவது கடினமானது என நினைத்தேன். 15 முதல் 20 ரன் கூடுதல் என்று கருதினேன். டிவில்லியர்ஸ் சுழற்பந்து வீரர்களுக்கு எதிராக நன்றாக ஆடினார்.

    எங்கள் அணியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் எளிதில் ஆட்டம் இழந்தனர். ஆனால் மைதானம் சிறியதாக இருந்தது. இதனால் பந்து எளிதாக பறந்தது.

    சேசிங்கின் போது எந்த பந்து வீச்சாளர் வீசுவார், யாருக்கு ஓவர் இருக்கிறது, கேப்டன் அடுத்து யாரை வீச வைப்பார் என்பதை கணிப்பது முக்கியம். சில போட்டிகளில் வெற்றி பெறலாம். சில போட்டிகளில் முடியாமல் போகலாம்.

    ஆனால் ஆட்டத்தை முடிப்பவர்கள் இளம் வீரர்களுக்கு உதவ வேண்டும். தங்கள் அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் இது முக்கியமானது. ஏனென்றால் நாளை நான் கூட விளையாடாமல் போகலாம். இந்த அனுபவத்தை வைத்து அவர்கள் விளையாட வேண்டும்.



    இந்தப் போட்டியில் அம்பதி ராயுடு சிறப்பாக விளையாடினார். ஸ்கோர் போர்டில் ரன்கள் உயர்ந்து கொண்டே இருக்க அவர் காரணமாக இருந்தார். சிறிய மைதானம் என்பதால் அவருக்கு ஏற்றதாக அமைந்தது.

    இவ்வாறு டோனி கூறி உள்ளார்.#IPL2018 #RCB #CSK #Dhoni
    Next Story
    ×