search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 2018 - டெல்லி அணியை வீழ்த்தி முதல் இடத்திற்கு முன்னேறியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
    X

    ஐபிஎல் 2018 - டெல்லி அணியை வீழ்த்தி முதல் இடத்திற்கு முன்னேறியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

    ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது. #VivoIPL #DDvKXIP

    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களமிறங்கினர். பிஞ்ச் 2 ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் ராகுல் உடன் மயன்க் அகர்வால் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். ராகுல் 23 ரன்களிலும், மயன்க் அகர்வால் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 



    அதைத்தொடர்ந்து கருண் நாயரும், யுவராஜ் சிங்கும் ஜோடி சேர்ந்தனர். யுவராஜ் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் டேவிட் மில்லர் களமிறங்கினார். இருவரும் சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். கருண் நாயர் 34 ரன்னிலும், டேவிட் மில்லர் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணி தரப்பில் லியாம் பிளங்கிட் 3 விக்கெட்களும், அவேஷ் கான், டிரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர். 



    இதையடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, கவுதம் காம்பிர் ஆகியோர் களமிறங்கினர். பிரித்வி ஷா 10 பந்ந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல் 12 ரன்னிலும், காம்பிர் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அவர்களை தொடர்ந்து ரிஷாப் பந்த் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்திருந்தது. 



    அதன்பின் ஷ்ரேயாஸ் அய்யர் - டேனியல் கிறிஸ்டேன் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். கிறிஸ்டேன் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இறுதியில் ராகுல் தெவாட்டியா, ஷ்ரேயாஸ் அய்யர் உடன் இணைந்து அணியின் வெற்றிக்காக போராடினார். தெவாட்டியா 24 ரன்கள் எடுத்து அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். 

    டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. பஞ்சாப் அணி பந்துவீச்சில் பரிந்தர் ஸ்ரன், அன்கித் ராஜ்புட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.



    நாளை நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #VivoIPL #DDvKXIP
    Next Story
    ×