search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புனேயில் ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது- டோனி நெகிழ்ச்சி
    X

    புனேயில் ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது- டோனி நெகிழ்ச்சி

    புனேயில் நேற்று நடந்த ஆட்டத்தில் ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளித்ததாக டோனி தெரிவித்துள்ளார். #dhoni #ipl

    புனே:

    ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது வெற்றியை பெற்றது.

    புனேயில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன் குவித்தது.

    தொடக்க வீரர் வாட்சன் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். ஐ.பி.எல். தொடரில் அவரது 3-வது செஞ்சூரியாகும். வாட்சன் 57 பந்தில் 106 ரன்னும் (9 பவுண்டரி, 6 சிக்சர்), ரெய்னா 29 பந்தில் 46 ரன்னும் (9 பவுண்டரி) எடுத்தனர். ஷிரேயாஸ் கோபால் 3 விக்கெட்டும், பென் லாங்லின் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 18 ஓவர்களில் 140 ரன்னில் சுருண்டது. இதனால் சென்னை அணி 64 ரன் வித்திசாயத்தில் அபார வெற்றி பெற்றது. பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 37 பந்தில் 45 ரன் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். ‌ஷர்துல் தாகூர், பிராவோ, தீபக் சாஹர், கரண்சர்மா தலா 2 விக்கெட்டும், வாட்சன், இம்ரான் தாகீர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்ற 3-வது வெற்றியாகும். இதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் அந்த அணி முதல் இடத்துக்கு முன்னேறியது. இது குறித்து டோனி கூறியதாவது:-

    இந்த தொடரில் நாங்கள் இப்போது தான் முதலில் பேட்டிங் செய்தோம். வழக்கமாக நாங்கள் பின்தங்கி இருந்து முன்னேறுவோம் ஆனால் இந்த போட்டியில் நாங்கள் முன்னிலையிலேயே இருந்தோம்.

    எங்கள் அணியில் இருக்கும் வீரர்களில் பெரும்பாலோனார் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள். எனவே உடல் தகுதியை தக்க வைத்துக்கொள்வது அவசியமானது. அனுபவம் கை கொடுக்கும் எங்கள் அணியில் சிறந்த பீல்டர்கள் உள்ளனர்.

    இந்த ஆடுகளம் குறித்து 100 சதவீதம் உறுதியாக சொல்ல முடியவில்லை. பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி பந்து வீச்சாளர்களுக்கு எளிதான பணியை கொடுத்துவிட்டனர். 200 ரன்னுக்கு மேல் எடுத்ததால் பவுலர்களின் பணி எளிதாகிவிட்டது. சேசிங்கில் முதல் 6 ஓவர் முக்கியமானது. ஆடுகளம் நன்றாக இருந்தால் எந்த அணியும் முதலில் பேட்டிங் செய்ய தயங்காது.

    சென்னைக்கு பதிலாக புனே மைதானத்தில் வந்து நாங்கள் விளையாடினோம். இங்கும் ஏராளமான ரசிகர்கள் வந்து எங்களை உற்சாகப்படுத்தினர். இது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. நான் கடந்த முறை புனே அணிக்காக இங்கு விளையாடிய போது எங்களை உற்சாகப்படுத்தினார்கள். அதற்கு கைமாறு செய்து இருக்கிறோம் என்று சொல்லலாம். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. புனே சூப்பர் கிங்ஸ் அல்ல.

    7-வது போட்டி முடிவில் இங்கு அதிகமான மஞ்சள் நிறத்தை காணலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபர்தை நாளை (ஞாயிற்றுக்கிழமை) சந்திக்கிறது.

    ராஜஸ்தான் அணி 3-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 6-வது ஆட்டத்தில் மும்பையை நாளை எதிர்கொள்கிறது. #dhoni #ipl 

    Next Story
    ×