search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன் குவிப்பு - ரெய்னாவை முந்திய கோலி
    X

    ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன் குவிப்பு - ரெய்னாவை முந்திய கோலி

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து முதலிடத்தில் இருந்த சுரேஷ் ரெய்னாவை விராட் கோலி முந்தினார். #IPL2018 #ViratKohli #SureshRaina
    மும்பை:

    11-வது ஐ.பி.எல். தொடரின் நேற்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி பெங்களூரை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன் குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா 52 பந்தில் 94 ரன்னிலும் (10 பவுன்டரி), 5 சிக்சர்) லீவிஸ் 42 பந்தில் 65 ரன்னும் (6 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். உமேஷ் யாதவ், ஆண்டர்சன் தலா 2 விக்கெட்டும், வோக்ஸ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய பெங்களூர் அணியால் 20 ஓவர் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை அணி 46 ரன்னில் வெற்றி பெற்றது. கேப்டன் விராட் கோலி ஒருவரே அபாரமாக ஆடினார். அவர் 62 பந்தில் 92 ரன் (7 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார்.



    இந்த வெற்றி மூலம் மும்பை இந்தியன்ஸ் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அந்த அணி தொடர்ச்சியாக சென்னை, ஐதராபாத், டெல்லியிடம் தோற்றது. தற்போது பெங்களூரை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. மும்பை அணி 5-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 22-ந்தேதி சந்திக்கிறது.

    பெங்களூர் அணி 3-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 5-வது ஆட்டத்தில் டெல்லியை 21-ந்தேதி எதிர்கொள்கிறது.

    நேற்றைய போட்டியில் 30 ரன்னை எடுத்த போது விராட் கோலி ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன் எடுத்து இருந்த ரெய்னாவை முந்தினார். விராட் கோலி 145 இன்னிங்சில் 4619 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இதில் 4 சதம், 32 அரை சதமும் அடங்கும். 401 பவுண்டரிகளும், 166 சிக்சர்களும் அடித்துள்ளார். அவரது சராசரி 38.17. ஸ்டிரைக்ரேட் 130.33 ஆகும்.



    ரெய்னா 159 இன்னிங்சில் 4558 ரன்னுடன் 2-வது இடத்தில் உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான அவர் காயம் காரணமாக கடந்த போட்டியில் ஆடவில்லை. 20-ந்தேதி நடைபெறும் போட்டியிலும் அவர் ஆடமாட்டார். இதனால் விராட் கோலி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிப்பார். இருவரது ஆட்டத்திறனை பொறுத்து யார் முதலில் இருப்பார் என்பது இந்த சீசன் முடிவில் தெரியும்.

    அதே நேரத்தில் மும்பை கேப்டன் ரோகித்தும் நெருங்கி வருகிறார். #IPL2018 #MIvRCB #ViratKohli #SureshRaina
    Next Story
    ×