search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐபிஎல் போட்டி இடமாற்றத்தால் ரூ.8.4 கோடி இழப்பு
    X

    சென்னை ஐபிஎல் போட்டி இடமாற்றத்தால் ரூ.8.4 கோடி இழப்பு

    சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டி இடமாற்றம் செய்யப்பட்டதால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும், மாநில அரசுக்கும் ரூ.8.4 கோடி இழப்பு ஏற்படும்.
    சென்னை:

    11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 7-ந்தேதி தொடங்கியது.

    இந்தப்போட்டியில் 7 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் ஆட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் சென்னையில் ஐ.பி.எல். போட்டியை நடத்த அரசியல் கட்சிகள், சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த எதிர்ப்பையும் மீறி பலத்த பாதுகாப்புடன் முதல் ஆட்டம் நடத்தப்பட்டது.

    அப்போது ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணாசாலையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது.

    அதோடு சேப்பாக்கம் மைதானத்துக்குள் செருப்பும் வீசப்பட்டது. மேலும் மத்திய அரசுக்கு எதிராக சிலர் கோ‌ஷங்களையும் எழுப்பினர். இந்த சம்பவம் கிரிக்கெட் உலகை சென்னையின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.

    இதை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் நடைபெற இருந்த எஞ்சிய 6 ஐ.பி.எல். ஆட்டமும் இடமாற்றம் செய்யப்பட்டது.

    இதுகுறித்து ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது:-

    சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். ஆட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று போலீசார் தெரிவித்துவிட்டனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மைதான ஆட்டங்களை மாற்ற முடிவு செய்யப்பட்டது.

    இந்த ஆட்டங்கள் புனேவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புனேக்கு மாற்றம் செய்யப்படுவதில் சென்னை அணிக்கு எந்தவித தயக்கமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 2 ஆண்டுகளாக கேப்டன் டோனி ரைசிங் புனே அணிக்காக விளையாடினார். இதனால் அங்குள்ள சூழ்நிலையை அவர் நன்கு அறிந்து இருப்பார்.

    மேலும் அங்கிருந்து மற்ற நகரங்களுக்கு விமான பயணம் மேற்கொள்வதில் எந்தவித சிரமும் இருக்காது என்பதால் சென்னை அணி தரப்பில் புனே தேர்வு செய்யப்பட்டதாக ஐ.பி.எல். வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஐ.பி.எல். போட்டி சென்னையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டதால் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இடமாற்றத்தால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும், மாநில அரசுக்கும் ரூ.8.4 கோடி இழப்பு ஏற்படும்.

    ஐ.பி.எல். போட்டியில் ஒரு ஆட்டத்துக்கு ரூ.60 லட்சத்தை மாநில அரசுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் செலுத்துகிறது. டிக்கெட் மூலம் கிடைக்கும் பணத்தில் 39 சதவீதம் செலுத்தப்படுகிறது. அதாவது கேளிக்கை வரி 25 சதவீதமாகும். 14 சதவீதம் ஜி.எஸ்.டி.யாகும்.

    6 ஆட்டங்கள் இடமாற்றம் செய்யப்பட்டதால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு ரூ.3.6 கோடியும், தமிழக அரசுக்கு ரூ.4.8கோடியும் வருவாய் இழப்பு ஏற்படும். #tamilnews
    Next Story
    ×