search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் தொடக்க விழாவில் கேப்டன்கள் அணிவகுப்பு இல்லை
    X

    ஐபிஎல் தொடக்க விழாவில் கேப்டன்கள் அணிவகுப்பு இல்லை

    ஐபிஎல் தொடரின் பிரமாண்ட தொடக்க விழாவில் நடைபெறும் கேப்டன்களின் அணிவகுப்பு இருக்காது எனக் கூறப்படுகிறது. #IPL2018
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் மிகப்பெரிய டி20 லீக் தொடரான ஐபில் தொடரின் 11-வது சீசன் அடுத்த மாதம் 7-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் மிகப்பெரிய அளவில் தொடக்க விழா நடத்தப்படும்.

    அப்போது அனைத்து அணி கேப்டன்களும் ஒன்றிணைந்து கலந்து கொண்டு கிரிக்கெட்டின் உத்வேகத்திற்கான உறுதிமொழியை எடுத்துக் கொள்வார்கள்.

    இந்த வருடமும் ஏப்ரல் 6-ந்தேதி தொடக்க விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஐபிஎல் ஆட்சிமன்றக்குழு 50 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் நியமித்துள்ள வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக்குழு வினோத் ராய் 50 கோடி ரூபாயை 30 கோடி ரூபாயாக குறைத்தார். அத்துடன் முந்தைய நாள் தொடக்க விழாவை ரத்து செய்தார்.

    இதனால் ஏப்ரல் 7-ந்தேதி தொடக்க விழா நடத்தப்பட இருக்கிறது. இந்த விழா முடிந்தவுடன் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அடுத்த நாள் டெல்லி டேல்டெவில்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மொகாலியிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் கொல்கத்தாவிலும் விளையாடுகிறார்கள். மொகாலி ஆட்டம் 4 மணிக்கும், கொல்கத்தா ஆட்டம் 8 மணிக்கும் நடக்கிறது.



    ஐபிஎல் அணிகள் போட்டிக்கு முன்பு அணிகள் பயிற்சி எடுப்பது முக்கியமானது. கவுதம் காம்பீர், அஸ்வின் ஆகியோர் தொடக்க விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். அடுத்த நாள் மாலை 4 மணி ஆட்டத்திற்கு முந்தைய நாள் மும்பை வந்தால் அவர்களின் பயிற்சி கட்டாயம் பாதிக்கும்.

    அத்துடன் காம்பீர், அஸ்வின் தொடக்க விழாவில் கலந்து கொண்டால், அவர்கள் 9 மணிக்கு மும்பையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் செல்ல வேண்டும். அதன்பிறகு விமானம் கிடையாது. மாலை நேரத்திற்குப் பிறகு மும்பையில் இருந்து சண்டிகருக்கு நேரடி விமானம் கிடையாது.

    ஞாயிற்றுக்கிழமை காலை டெல்லியில் இருந்து அவர்கள் சண்டிகருக்கு விமானம் மூலம் செல்ல முடியாது. பராமரிப்பு காரணமாக விமான நிலையம் மூடப்பட்டிருக்கும். அதனால் அவர்கள் காரில்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தானது.

    இதேபோல்தான் விராட் கோலிக்கும், தினேஷ் கார்த்திக்குக்கும். அவர்கள் விழாவில் கலந்து கொண்டு பின்னர் கொல்கத்தா செல்வது கடினம். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன்களை தவிர மற்றவர்கள் தொடக்க விழாவில் கலந்து கொள்ளமாட்டார்கள் எனக்தெரிகிறது.

    இதுகுறித்து நாங்கள் கலந்தாலோசித்து நல்ல முடிவு எடுப்போம். கேப்டன்கள் ஒரு நாளைக்கு முன்பு வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கான காட்சிகளை சூட் செய்து, தொடக்க விழாவின்போது ஒளிபரப்பு செய்யப்படலாம் என மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இதனால் ஐபிஎல் தொடக்க விழாவில் கேப்டன்கள் பங்கேற்பது சந்தேகம்தான் என்பது உறுதியாகியுள்ளது. #IPL2018 #IPL11 #MI #CSK #KKR #RCB #DD #KXIP #SRH #RR
    Next Story
    ×