search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று - யுனைடெட் அரபு எமிரேட்சை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்
    X

    உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று - யுனைடெட் அரபு எமிரேட்சை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணியுடனான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #ICCWCQ
    ஹராரே:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் ஹராரேவில் இன்று நடந்த சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற அரபு எமிரேட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    எமிரேட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக முஸ்தபா மற்றும் சிராக் சூரி ஆகியோர் களமிறங்கினர். ஆப்கானிஸ்தான் அணியினரின் பந்து வீச்சில் சிக்கி அரபு எமிரேட்ஸ் அணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.

    அரபு எமிரேட்ஸ் அணியின் ஷைமன் அன்வர் மட்டும் தாக்குப் பிடித்து அரை சதமடித்தார். அவர் 64 ரன்களில் அவுட்டானார். அதேபோல், மொகமது நவீத் 20 பந்துகளில் 2 சிக்சர், 7 பவுண்டரி உள்பட் 45 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில், அந்த அணி 43 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷீத் கான் 5 விக்கெட்டும், தவ்லத் ஜர்தான் 3 விக்கெட்டும், ரகுமான், நபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 54 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், தொடக்க ஆட்டக்காரரான குல்பதின் நயீப் சிறப்பாக விளையாடினார். அவருக்கு நஜிபுல்லா ஜர்ஹான் நன்கு ஒத்துழைப்பு தந்தார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 34.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நயீப் 74 ரன்களுடனும், ஜர்ஹான் 63 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

    அரபு எமிரேட்ஸ் அணி சார்பில் மொகமது நவீத், காதிர் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டும், அகமது ரசா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். #ICCWCQ
    Next Story
    ×