search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இல்லாதது வருத்தம்- தினேஷ் கார்த்திக்
    X

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இல்லாதது வருத்தம்- தினேஷ் கார்த்திக்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடாதது வருத்தம் அளிக்கிறது என்று நிதாஹாஸ் முத்தரப்பு தொடர் ஹீரோ தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். #IPL2018 #CSK #DK
    இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வங்காள தேச அணிக்கெதிராக கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். 9 பந்தில் 29 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது பெற்றார். சுமார் 10 வருடங்கள் கழித்து மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

    வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த தினேஷ் கார்த்திக் இன்று சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘கடைசி பந்தில் சிக்ஸ் அடிப்பேன் என்று நம்பினேன். தற்போது இந்திய அணியில் இடம்பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு வீரர்களும் சிறப்பாக விளையாடுகிறார்கள்.

    இந்திய அணியில் இடம் கிடைத்தால் அதை தக்க வைப்பது மிகக்கடினம். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணியில் தொடர்ந்து இடம்கிடைக்கும்.

    ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்பதே நீண்ட நாள் விருப்பம். ஆனால், எந்தெந்த வீரர்கள் எந்த அணியில் விளையாட வேண்டும் என்பதை ஐபிஎல் ஏலம்தான் முடிவு செய்யும். டெல்லி வீரர்கள் சென்னைக்கும், சென்னை வீரர்கள் மற்ற அணிக்காகவும் விளையாடுவதுதான் ஐபிஎல் தொடரின் சிறப்பு.



    கொல்கத்தா அணி கேப்டனாக சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பது முக்கிய நோக்கமல்ல. பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும். அதன்பின் சாம்பியன் பட்டம் குறித்து யோசிக்க வேண்டும். ஆடும் லெவன் அணியை சிறப்பான வகையில் உருவாக்குவது. பெரும்பாலும் அந்த அணியை மாற்றாமல் விளையாடுவதுதான் முக்கிய இலக்கு.

    தமிழ்நாட்டில் பிறந்த நான், இதுவரை தமிழ்நாடு அணியைத் தவிர வேறு எந்த அணிக்காகவும் நான் விளையாடியதில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்பது நீண்டகால ஆசை. சிஎஸ்கே-யில் இடம் கிடைக்காதது வருத்தம்தான்’’ என்றார்.
    Next Story
    ×