search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல்.: 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சென்னையின் எப்.சி.
    X

    ஐ.எஸ்.எல்.: 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சென்னையின் எப்.சி.

    ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் பெங்களூரு அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய சென்னையின் எப்.சி. இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. #HeroISL #BENCHE #ChennaiyinFC #BengaluruFC

    பெங்களூரு:

    4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கடந்த ஆண்டு நவம்பர் 17-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரைஇறுதி சுற்று முடிவில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி. ஆகிய அணிகள் இறுதிப்போட்டியை எட்டின.

    4 மாத காலம் நடந்த இந்த கால்பந்து திருவிழாவில் ‘கிளைமாக்ஸ்’ இன்றிரவு (சனிக்கிழமை) பெங்களூருவில் உள்ள கான்டீரவா ஸ்டேடியத்தில் அரங்கேறியது. இதில் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.- பெங்களூரு எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இவ்விரு அணிகளும் ஏற்கனவே லீக்கில் இரண்டு ஆட்டங்களில் மோதியுள்ளன. ஒன்றில் பெங்களூரு எப்.சி.யும் (3-1), மற்றொன்றில் சென்னையின் எப்.சி.யும் (2-1) வெற்றி கண்டுள்ளன.



    2015-ம் ஆண்டு சாம்பியனான சென்னை அணி, இந்த சீசனில் லீக் சுற்றில் 9 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தது. அரைஇறுதி சுற்றில் 4-1 என்ற கோல் வித்தியாசத்தில் கோவாவை புரட்டியெடுத்தது.

    பெங்களூரு எப்.சி., தங்களது முதல் சீசனிலேயே பிரமிக்கத்தக்க வகையில் விளையாடி இருக்கிறது. லீக் சுற்றில் 18 ஆட்டங்களில் 13-ல் வெற்றிகளை குவித்து முதலிடத்தை பிடித்த பெங்களூரு அணி அரைஇறுதி சுற்றில் 3-1 என்ற கோல் கணக்கில் புனே சிட்டியை விரட்டியடித்தது.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இன்றைய இறுதிப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டம் தொடங்கிய 9-வது நிமிடமே பெங்களூரு அணியின் சுனில் செத்ரி கோல் அடித்து சென்னை அணிக்கு அதிர்ச்சி அளித்தார். அதைத்தொடர்ந்து சென்னை அணியின் மெய்ல்சன் அல்வெஸ் 17-வது நிமிடத்திலும், 45-வது நிமிடத்திலும் இரு கோல்கள் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் சென்னை அணி 2-1 என முன்னிலை பெற்றது.



    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் சென்னை அணியின் ராபெல் அகஸ்டோ மேற்கொண்டு ஒரு கோல் அடித்தார். இதனால் சென்னை அணி 3-1 என முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து 92-வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் மிகு கோல் அடித்தார். இதனால் இறுதிநேர ஆட்டம் சூடு பிடித்தது. இருப்பினும் பெங்களூரு அணியினர் மேற்கொண்டு கோல் அடிக்காததால், 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சென்னையின் எப்.சி. அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.



    கோப்பையை வென்ற சென்னையின் எப்.சி. அணிக்கு ரூ.8 கோடியையும், தோல்வி அடைந்த பெங்களூரு அணிக்கு ரூ.4 கோடியும் பரிசுத்தொகையாக அளிக்கப்பட்டது. #HeroISLFinal #BENCHE #ChennaiyinFC #BengaluruFC #LetsFootball
    Next Story
    ×