search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை இறுதிப்போட்டி: இந்தியா கோப்பையை வெல்லுமா?- வங்காளதேசத்துடன் மோதல்
    X

    நாளை இறுதிப்போட்டி: இந்தியா கோப்பையை வெல்லுமா?- வங்காளதேசத்துடன் மோதல்

    இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதும் இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. இந்தியாவுக்கு எல்லா வகையிலும் வங்காளதேசம் ஈடுகொடுத்து போராடும் என்பதால் நாளைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும். #NidahasTrophy
    கொழும்பு:

    இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது.

    ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. அந்த அணி 4 ஆட்டத்தில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தது.

    நேற்று நடந்த கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் வங்காளதேசம் 2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை மீண்டும் அதிர்ச்சிகரமாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    வங்காளதேசம் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றது. இலங்கை அணி ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் இரு புள்ளிகளை மட்டுமே பெற்று வெளியேறியது. போட்டியை நடத்தும் இலங்கை அணி 2 முறையும், வங்காளதேசத்திடம் தோற்று வெளியேறியது பரிதாபமே.

    இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதும் இறுதிப்போட்டி நாளை நடக்கிறது.

    இந்திய அணி 2 முறை வங்காளதேசத்தை வீழ்த்தி இருந்ததால் கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது. அதே நேரத்தில் வங்காளதேசத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அந்த அணி இலங்கையை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி இருந்தது.

    இந்திய அணியின் பேட்டிங்கில் தவான் (188 ரன்) கேப்டன் ரோகித்சர்மா (117), மனிஷ் பாண்டே (106), ரெய்னா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    பந்துவீச்சில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். சுழற்பந்து வீரரான அவர் 4 ஆட்டத்தில் 7 விக்கெட் கைப்பற்றி இந்த தொடரில் முதல் இடத்தில் உள்ளார்.

    ‌ஷர்துல் தாகூர் (6 விக்கெட்), ஜெய்தேவ் உனட்கட், யசுவேந்திர சாஹல் (தலா 5 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய்சங்கர் அணிக்கு உதவிகரமாக இருந்து வருகிறார்.

    வங்காளதேசத்துக்கு எதிராக விளையாடிய அனைத்து 20 ஓவரிலும் (7 ஆட்டம்) இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது.

    இந்தியாவை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் வங்காளதேசம் உள்ளது. இலங்கையை 2 தடவை வென்றதால் அந்த அணி இறுதிப்போட்டியில் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.

    கேப்டன் சகீப்- அல்- ஹசன் அணிக்கு திரும்பி இருப்பது வங்காள தேசத்துக்கு கூடுதல் பலமே. அந்த அணியில் முஷ்பிகுர் ரகீம் (190 ரன்), தமிம் இக்பால் (134 ரன்), முஷ்டாபிசுர் ரகுமான் (6 விக்கெட்), மகமதுல்லா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இந்தியாவுக்கு எல்லா வகையிலும் வங்காளதேசம் ஈடுகொடுத்து போராடும் என்பதால் நாளைய இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும். இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
    Next Story
    ×