search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து சான்ட்னெர் விலகல்
    X

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து சான்ட்னெர் விலகல்

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னெருக்கு கால்முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகி உள்ளார்.#CSK #MitchellSantner
    வெலிங்டன்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னெருக்கு, இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. ‘ஸ்கேன்’ பரிசோதனையில், கால் முட்டியில் எலும்பில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. காயத்தன்மை மோசமாக இருப்பதால் ஆபரேஷன் செய்வதே சிறந்த வழி என்று டாக்டர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். இதையடுத்து காயத்துக்கு அவர் ஆபரேஷன் செய்ய முடிவு செய்திருக்கிறார்.

    அதன் பிறகு அவர் 6 முதல் 9 மாதங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டி இருக்கும். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஏப்ரல் 7-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஆகியவற்றில் அவர் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

    சான்ட்னெரை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.50 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கி இருந்தது. 26 வயதான சான்ட்னெர் சிக்கனமாக சுழற்பந்து வீசுவது மட்டுமின்றி, அதிரடியாக பேட்டிங்கும் செய்யக்கூடியவர். அவரது விலகல், சென்னை அணிக்கு பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை.

    நியூசிலாந்து பயிற்சியாளர் மைக் ஹெஸ்சன் கூறும் போது, ‘நியூசிலாந்து அணியில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சான்ட்னெர் முக்கியமான வீரராக திகழ்கிறார். அடுத்து வரும் தொடர்களில் அவரை தவற விடுவது நிச்சயம் எங்களுக்கு பாதிப்பு தான்’ என்றார். இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் சான்ட்னெர் 216 ரன்களுடன், 3 விக்கெட்டும் எடுத்தது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×