search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிற்சி ஆட்டத்தில் பந்து வீச்சாளர்களின் பேட்டிங்கால் தப்பித்தது ஆஸ்திரேலியா
    X

    பயிற்சி ஆட்டத்தில் பந்து வீச்சாளர்களின் பேட்டிங்கால் தப்பித்தது ஆஸ்திரேலியா

    தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் திணறிய நிலையில், பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடி அணியை மீட்டனர். #SAvAUS
    தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற 1-ந்தேதி (மார்ச்) டர்பனில் தொடங்குகிறது. இதற்கு முன்னோட்டாக ஆஸ்திரேலியா தென்ஆப்பிரிக்கா ‘ஏ’விற்கு எதிராக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

    இந்த ஆட்டம் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி கேப்டன் சோண்டோ பேட்டிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலியாவின் ஹசில்வுட் மற்றும் கம்மின்ஸ் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி வீரர்கள் தடுமாறினார்கள். தொடக்க வீரர் ஹம்சா 44 ரன்களும், 3-வது வீரர் ப்ரூயின் 46 ரன்களும், முத்துசாமி 36 ரன்களும் எடுக்க, 58.5 ஓவரில் 220 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க் 1 விக்கெட் வீழ்த்தினாலும், ஸ்விங் ஸ்பெஷலிஸ்ட் பந்து வீச்சாளர் ஹசில்வுட் 3 விக்கெட்டும், வேகப்பந்து அச்சுறுத்தல் வீரர் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், மிட்செல் மார்ஷ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 10 விக்கெட்டுக்களையும் வேகப்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றினார்கள்.



    பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள் கவாஜா (22), ஹேண்ட்ஸ்காம்ப் (0), ஸ்மித் (23) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் 4-வது விக்கெட்டுக்கு தொடக்க வீரர் பான்கிராப்ட் உடன் ஷேன் மார்ஷ் ஜோடி சேர்ந்தார்.

    நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்திருந்தது. பான்கிராப்ட் 24 ரன்னுடனும், ஷேன் மார்ஷ் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பான்கிராப்ட், ஷேன் மார்ஷ் ஆட்டத்தை தொடர்ந்தனர். ஷேன் மார்ஷ் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு பான்கிராப் உடன் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார்.

    அணியின் ஸ்கோர் 131 ரன்னாக இருக்கும்போது 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பான்கிராப்ட் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் பெய்ன் 22 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 28 ரன்னிலும் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா 178 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

    8-வது விக்கெட்டுக்கு கம்மின்ஸ் உடன் மிட்செல் ஸ்டார்க் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஸ்டார்க் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் - ஸ்டார்க் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்தது.



    9-வது விக்கெட்டுக்கு கம்மின்ஸ் உடன் நாதன் லயன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் நல்ல முறையில் விளையாடியது. நாதன் லயன் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் - நாதன் லயன் ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தது.

    கடைசி விக்கெட்டுக்கு கம்மின்ஸ் உடன் ஹசில்வுட் ஜோடி சேர்ந்தார். கம்மின்ஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். கடைசி விக்கெட்டுக்கான ஜோடியும் 40 ரன்கள் சேர்க்க, ஆஸ்திரேலியா 90.4 ஓவரில் 329 ரன்கள் குவித்து ஆல்அவுட் அனது.

    பந்து வீச்சாளர்களான கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், லயன், ஹசில்வுட் ஆகியோர் கடைசி 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்தது. இந்த ரன்கள்தான் ஆஸ்திரேலியா 109 ரன்கள் முன்னிலைப் பெற முக்கிய காரணமாக இருந்தது.
    Next Story
    ×