search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சச்சினின் 100 சதம் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் - விஸ்வநாத் நம்பிக்கை
    X

    சச்சினின் 100 சதம் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் - விஸ்வநாத் நம்பிக்கை

    தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்று முன்னாள் வீரர் குண்டப்பா விஸ்வநாத் தெரிவித்துள்ளார். #SAvIND #ViratKohli #SachinTendulkar
    கொல்கத்தா:

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்.

    தென்ஆப்பிரிக்க பயணத்தில் அவர் 4 சதம் (டெஸ்ட் 1+ ஒருநாள் போட்டி 3) அடித்து முத்திரை பதித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் அவர் 56 செஞ்சூரி (டெஸ்ட் 21 + ஒருநாள் போட்டி 35) அடித்துள்ளார்.

    இந்த நிலையில் தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்று முன்னாள் வீரர் குண்டப்பா விஸ்வநாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-



    விராட் கோலியின் ஆட்டம் நிலையாக இருக்கிறது. ரன் குவிக்கும் எந்திரமாக திகழ்கிறார். அவரது ஆட்டத்திறமையை பார்த்தாலே இது தெரியும். சதம் அடிப்பதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். ரன்களை குவிப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்.

    இதனால் சச்சின் தெண்டுல்கரின் 100 சதம் சாதனையை முறியடிக்க கோலிக்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதற்கு நீண்ட காலம் ஆகலாம். ஏனென்றால் 100 சதம் என்பது உச்சத்தில் இருக்கிறது.

    சாதனைகள் எல்லாமே முறியடிக்கப்பட கூடியதே. தெண்டுல்கரே தனது சாதனையை முறியடித்தால் மகிழ்ச்சி அடைவார்.

    பேட்டிங்கில் மட்டுமின்றி கேப்டன் பதவியிலும் கோலி சிறப்பாக செயல்படுகிறார். போட்டி முடிவுகளை பார்க்கும் போது இது தெரியும். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் பெற்ற வெற்றி மகத்தானது. அதை தொடர்ந்து ஒருநாள் தொடரில் வெற்றி கிடைத்தது. தென்ஆப்பிரிக்க மண்ணில் பெற்ற இந்த வெற்றி சிறப்பானது. இதற்கு பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.

    குல்தீப் யாதவ், யசுவேந்திர சஹால் ஒருநாள் தொடரில் மிகவும் அபாரமாக பந்து வீசினார்கள். இதனால் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் அணிக்கு திரும்புவது மிகவும் கடினம்.

    2019 உலக கோப்பை போட்டியில் டோனி விளையாடுவது பற்றி தேர்வு குழுவினரும், அணி நிர்வாகமும் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் அவர் இன்னும் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சர்வதேச போட்டிகள் அனைத்தும் சேர்த்து தெண்டுல்கர் 664 ஆட்டத்தில் 100 சதங்கள் (டெஸ்ட் 51 + ஒருநாள் போட்டி 49) அடித்து முதல் இடத்தில் உள்ளார்.

    விராட் கோலி 56 சதத்துடன் (330 போட்டி) 5-வது இடத்தில் உள்ளார். ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) 71 சதங்களுடன் (560 போட்டி) 2-வது இடத்திலும், சங்ககரா (இலங்கை) 63 சதத்துடன் (594) 3-வது இடத்திலும், காலிஸ் (தென்ஆப்பிரிக்கா 62 சதத்துடன் (519) 4-வது இடத்திலும் உள்ளனர். #SAvIND #ViratKohli #SachinTendulkar #Kohli #TeamIndia
    Next Story
    ×