search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவுக்கு எதிரான 3வது டி20: 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்கா மகளிர் அணி வெற்றி
    X

    இந்தியாவுக்கு எதிரான 3வது டி20: 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்கா மகளிர் அணி வெற்றி

    இந்தியா மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தென்ஆப்ரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDWvSAW #SAWvINDW
    ஜொகன்னஸ்பர்க்:

    தென்ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது. டி20 தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.



    இதில் டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா அணி கேப்டன் டேன் வான் நெய்கெர்க் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் மிதாலி ராஜ், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். மிதாலி ராஜ் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அதன்பின் ஸ்மிரிதி மந்தனா உடன் ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் எடுத்தனர்.

    மந்தனா 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஹர்மன்பிரீத் கவுர் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்தவர்களில் வேதா கிருஷ்ணமூர்த்தி 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 17.5 ஓவர்களில் 133 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென்ஆப்ரிக்கா அணி பந்துவீச்சில் ஷப்னிம் இஸ்மாயில் ஐந்து விக்கெட்களும், மசபடா கிளாஸ் இரண்டு விக்கெட்களும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 134 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தென்ஆப்ரிக்கா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகளாக லிசெல் லீ, டேன் வான் நெய்கெர்க் ஆகியோர் களமிறங்கினர். லிசெல் லீ, 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சுன் லுயஸ், நெய்கெர்க்குடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிகாட்டினார்.

    நெய்கெர்க் 26 ரன்கள் (5 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய மிக்னான் டு ப்ரீஸ் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். சுன் லுயஸ் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சோலே ட்ரையான் அதிரடியாக விளையாடினார். அவர் 15 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் நான்கு பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.

    தென்ஆப்ரிக்கா அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி பந்துவீச்சில் பூஜா வஸ்திரகர் 2 விக்கெட்களும், அனுஜா பாட்டில், ராஜேஷ்வரி கயக்வாத், பூனம் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இது சர்வதேச டி20 போட்டிகளில் தென்ஆப்ரிக்கா அணியில் 30-வது வெற்றியாகும்.

    இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கிடையேயான நான்காவது டி20 போட்டி 21-ம் தேதி நடைபெற உள்ளது. #INDWvSAW #SAWvINDW
    Next Story
    ×