search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் டி-20 போட்டி - தென் ஆப்ரிக்காவை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
    X

    முதல் டி-20 போட்டி - தென் ஆப்ரிக்காவை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

    முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணி தென் ஆப்ரிக்கா அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. #SAvIND #first t20
    ஜோகன்னஸ்பர்க்:

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி-20 கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டுமினி பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    இந்தியா சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, தவான் ஆகியோர் களமிறங்கினர். ஒருநாள் தொடரில் திணறிய ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 9 பந்தில் தலா இரண்டு பவுண்டரி, சிக்ஸ் உடன் 21 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    அடுத்து களமிறங்கிய ரெய்னா 7 பந்தில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 15 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இவரகளது அதிரடியால் இந்தியா பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 78 ரன்கள் குவித்தது.

    விராட் கோலி 20 பந்தில் 26 ரன்கள் சேர்த்து அவுட்டானார். அப்போது இந்தியா 9.3 ஓவரில் 108 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு தவான் உடன் மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய தவான் 12-வது ஓவரில் பவுண்டரி அடித்து அரைசதத்தை எட்டினார். தவான் 39 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.



    இறுதியில், இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. பாண்டியா 7 பந்தில் 13 ரன்னும், மணீஷ் பாண்டே 27 பந்தில் 29 ரன்களும் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர். 

    இதையடுத்து,  204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. அந்த அணியின் ஸ்மட்ஸ் , ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    அந்த அணியில் ஹென்ரிக்ஸ் மட்டும் தாக்கு பிடித்து சிறப்பாக ஆடினார். அவருக்கு மற்ற வீரர்கள் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

    இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹென்ரிக்ஸ்  50 பந்துகளில் ஒரு சிக்சர், 8 பவுண்டரியுடன் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பெஹார்டியன் 27 பந்துகளில் 2 சிக்சர்கள், 3 பவுண்டரியுடன் 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 24 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்து அசத்தினார். உனத்கட், பாண்ட்யா, சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

    ஆட்ட நாயகன் விருதை புவனேஷ்வர் குமார் வென்றார். இருஅணிகளுக்கு இடையேயான அடுத்த போட்டி செஞ்சூரியனில் பிப்ரவரி 21-ம் தேதி நடைபெறவுள்ளது. #SAvIND #firstt20 #tamilnews
    Next Story
    ×