search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தவான் அதிரடியால் தென்ஆப்பிரிக்காவிற்கு 204 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா
    X

    தவான் அதிரடியால் தென்ஆப்பிரிக்காவிற்கு 204 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா

    17 ரன்னில் அவுட்டாகும் வாய்ப்பில் இருந்து தப்பிய தவான் 72 ரன்கள் குவித்ததால், தென்ஆப்பிரிக்காவிற்கு 204 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. #SAvIND #Dhawan
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 கிரக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டுமினி பந்து வீச்சு தேர்வு செய்தார். இந்திய அணியில் ரகானே, ஷ்ரேயாஸ் அய்யர், குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு ரெய்னா, மணீஷ் பாண்டே, உனத்கட் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். சுரேஷ் ரெய்னா சரியாக ஒரு வருடம் கழித்து அணியில் இடம்பிடித்தார்.

    தென்ஆப்பிரிக்கா அணியில் டி வில்லியர்ஸ் காயம் காரணமாக இடம்பெறவில்லை. வேகப்பந்து வீச்சாளர் ஜூனியர் டாலா, விக்கெட் கீப்பர் கிளாசன் ஆகியோர் அறிமுகமானார்கள்.

    ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை பேட்டர்சன் வீசினார். ஒருநாள் தொடரில் திணறிய ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். 2-வது ஓவரை புதுமுக வீரர் டாலா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் பவுண்டரி அடித்த சர்மா, 5-வது பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவர் 9 பந்தில் தலா இரண்டு பவுண்டரி, சிக்ஸ் உடன் 21 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து ரெய்னா களம் இறங்கினார். இவர் 3-வது ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்ஸ் விளாசினார். 4-வது ஓவரை டாலா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் தவான் சிக்ஸ் அடித்தார். லெக் சைடு வந்த 3-வது பந்தை அடிக்க முயன்றார். பந்து கையுறையில் உரசி விக்கெட் கீப்பரிடம் சென்றது.

    ஆனால் தென்ஆப்பிரிக்கா வீரர்கள் அப்பீல் கேட்கவில்லை. அதேவேளையில் நடுவரும் விக்கெட் கொடுக்கவில்லை. இதனால் தவான் 17 ரன்னில் அவுட்டாகும் கண்டத்தில் இருந்து தப்பினார். ஆனால் இதே ஓவரின் 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரெய்னா, கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். ரெய்னா 7 பந்தில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 15 ரன்கள் சேர்த்தார்.



    3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்தியா 4.3 ஓவரில் 50 ரன்னைக் கடந்தது. மோரிஸ் வீசிய 5-வது ஓவரின் கடைசி இரண்டு பந்தையும் தவான் பவுண்டரிக்கு விரட்டினார். 6-வது ஓவரை டாலா வீசினார். இந்த ஓவரில் தவான் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியும், கோலி ஒரு பவுண்டரியும் அடித்தனர். இந்தியா பவர்பிளே ஆன முதல் 6 ஓவரில் 78 ரன்கள் குவித்தது.

    8-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே விராட் கோலி கேட்ச் கொடுத்தார். ஆனால் பெஹார்டியன் கேட்ச் பிடிக்க தவறினார். அதன்பின் இந்த ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். அதேவேளையில் ஷம்சி வீசிய 10-வது ஓவரின் 3-வது பந்தில் கோலி எல்பிடபிள்யூ ஆனார். அவர் 20 பந்தில் 26 ரன்கள் சேர்த்தார். விராட் கோலி அவுட்டாகும்போது இந்தியா 9.3 ஓவரில் 108 ரன்கள் எடுத்திருந்தது.

    4-வது விக்கெட்டுக்கு தவான் உடன் மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய தவான் 12-வது ஓவரில் பவுண்டரி அடித்து அரைசதத்தை எட்டினார். தவான் 27 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய தவான் 39 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தவான் அவுட்டாகும்போது இந்தியா 14.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்திருந்தது. 5-வது விக்கெட்டுக்கு மணீஷ் உடன் டோனி ஜோடி சேர்ந்தார்.


    2 விக்கெட் வீழ்த்திய புதுமுக வீரர் டாலா

    19-வது ஓவரை கிறிஸ் மோரிஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் டோனி க்ளீன் போல்டானார். அவர் 11 பந்தில் 2 பவுண்டரியுடன் 16 ரன்கள் சேர்த்தார். டோனி அவுட்டாகும்போது இந்தியா 19.1 ஓவரில் 183 ரன்கள் எடுத்திருந்தது. மணீஷ் பாண்டே - டோனி ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 21 பந்தில் 28 ரன்கள் சேர்த்தது. டோனி அவுட்டானதும் ஹர்திக் பாண்டியா களம் இறங்கினார்.

    இருவரும் கடைசி 11 பந்தில் 20 ரன்கள் சேர்க்க இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. பாண்டியா 7 பந்தில் 13 ரன்னும், மணீஷ் பாண்டே 27 பந்தில் 29 ரன்களும் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.

    பின்னர் 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×